தூத்துக்குடியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 1,600 லிட்டர் கலப்படபால் பறிமுதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை ஆவின் நிறுவனம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், காவல்துறையினர், தொழிலாளர் நலத்துறை இணைந்து புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வினியோகத்திற்காக கொண்டு செல்லப்படும் பாலை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த அதிரடி சோதனையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர், ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், மத்தியபக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், வடிவேல் ராஜா, சுபா, தொழிலாளர் நலத்துறை உதவியாளர் வள்ளுவன் உள்ளிட்ட அலுவலர்கள் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆவின் பால் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதையும் படியுங்கள்: சிப்காட் அமைக்க எதிர்ப்பு: உத்தனப்பள்ளியில் இன்று கடைகள் அடைப்பு அப்போது சில கேன்களில் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் 600 லிட்டர் பாலும், பழைய பஸ் நிலையம் அருகே 800 லிட்டர் பாலும், டூவிபுரம் பகுதியில் சுமார் 200 லிட்டர் பாலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில், பொதுமக்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் பால் கலப்படம் செய்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். தூத்துக்குடி மட்டுமின்றி கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும் பால் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்று கூறினார்.