வைரஸ் காய்ச்சலை கண்டு பெரிய அளவில் பதற்றம் அடைய தேவையில்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை தடுக்க 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 200 இடங்களிலும் பிற மாவட்டங்களில் 800 இடங்களிலும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. வைரஸ் காய்ச்சலை கண்டு பெரிய அளவில் பதற்றம் அடைய தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
3 அல்லது 4 நாள்கள் ஓய்வெடுத்து கொண்டால் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மூலம் பிறரும் பாதிக்கப்படலாம் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளது. வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் தங்களை படுத்திக்கொள்ள வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்ய இருக்கிறோம். கொரோனா தொற்று பரவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இந்தியாவில் இன்ஃப்ளூயன்சா ஏ என்ற H3N2 வகைக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றின் காரணமாக இருமளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் மக்கள் எளிதாக வீட்டிற்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவ வசதியை பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை தொடங்கி வைத்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.