அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல்
அருணாச்சல பிரதேசத்தில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரு விமானிகளில் ஒருவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின், திராங் பகுதியில் உள்ள போம்டிலா அருகே ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர், நேற்று காலை 9:15 மணிளவில் விபத்திற்குள்ளானது. அதில் இருந்த ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர்
அவர்களின் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மற்றொரு நபரான மேஜர் ஜெயந்த், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் உடல் இன்று அசாம் மாநிலம் தேஸ்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலமாக இரவு 8 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன் பிறகு சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
முதலமைச்சர் இரங்கல்
மேலும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் பீமா காந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திராங் பகுதியில் வழக்கமான பயிற்சிக்காக இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றது.
காலை 9.15 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் மேற்கு போம்திலா அருகே மண்டலா மலைப்பகுதியில் மேலே பறந்து கொண்டிருந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது என குவாஹட்டி ராணுவ தளத்தின் செய்தித் தொடர்பாலர் தெரிவித்தார். கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து தேடுதல் பணியில் ராணுவம் ஈடுபட்டது.
பகல் 12.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் பங்ஜலிப் பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானதாக உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அங்கு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பனிமூட்டம் காரணமாக அப்பகுதியில் மீட்பு பணிகள் தாமதமாயின.
சிக்னல் ஏதுமில்லாத இந்த இடத்தில் பனிமூட்டத்தின் காரணமாக 5 மீட்டருக்கு மேல் தெளிவாக பார்க்க முடியாத நிலை இருந்ததாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பது தெரியவந்துள்ளது.