காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 7 பேர் பலி – 15 பேருக்கு சிகிச்சை
காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையில் சிறிய அளவில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த, பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. அந்த நேரத்தில் குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். பலத்த வெடிசத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.
தீ மளமளவென பரவியதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
நடந்த சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டிஐஜி பகலவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேல் சிகிச்சைக்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.