ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: மாநிலத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா? மத்திய அமைச்சர் சொன்ன முழு பதில் இதுதான்
ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தை கொண்டு வருவதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருப்பதாக மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி எழுப்பிய கேள்விக்கு தமது எழுத்துபூர்வ பதிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் கூாக்கூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி பல மாத பரிசீலனைக்குப் பிறகு மீண்டும் மாநில அரசுக்கே சமீபத்தில் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், அதே விவகாரத்தில் வழிகாட்டுகள் தொடர்பாக மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில் அத்தகைய சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று கூறியிருக்கிறார்.
ஆனால், மாநில ஆளுநர் தமிழ்நாடு அரசிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்படும் திறன் விளையாட்டு பற்றி குறிப்பிடும் அவர், கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பை சுட்டிக்காட்டி ஆன்லைன் கேமிங் விவகாரத்தின் ஒழுங்குமுறை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் பதில் என்ன?
இந்த விவகாரத்தில், மக்களவை திமுக உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மத்திய அரசிடம் இரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
முதல் கேள்வியில், மனநல பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் திறமை மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டு விளையாட்டுகளுக்கான ஆன்லைன் கேம்களுக்கான வழிகாட்டுதல்களின் விவரங்கள் என்ன என்றும் இரண்டாவது கேள்வியில், இணையதள உருவாக்கம் மற்றும் விளையாட்டுக்கான இடைக்கால வழிகாட்டுதல்கள் விவரங்கள், வன்முறை மற்றும் அடிமையாக்கும் கேமிங்கின் விளைவுகளை குறைக்கும் வகையில் அத்தகைய விளையாட்டுகளின் மேம்பாடு, தளத்தின் வடிவமைப்பிற்கான பரிந்துரைக்கப்பட்ட தர வழிகாட்டுதல்கள் என்ன என்றும் எஸ்.ஆர். பார்த்திபன் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அளித்துள்ள பதிலில், “பந்தயம் மற்றும் சூதாட்டம்” என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-இன் 34ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. அதன்படி, மாநிலங்கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் ஆன்லைனில் கிடைக்கும் சூதாட்டத்தை சமாளிக்க தங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.
திறமை விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகள் இடையே வேறுபாடு குறித்து நீதித்துறை தீர்ப்புகள் உள்ளன. திறன் விளையாட்டுகளில் வெற்றி பெற கணிசமான அளவு திறன் தேவைப்படும். விளையாட்டுகளை குறிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல, பெரும்பாலும் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள் ‘சூதாட்டம்’ என இந்திய சட்டங்களின் கீழ் கருதப்படுகிறது.
துறைப் பணிகள் விதி ஒதுக்கீடு திருத்தத்தில் 23.12.2022 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் “ஆன்லைன் கேமிங்” என்ற விவகாரம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஆன்லைன், சூதாட்டத்தை தடுக்கும் சட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்றினாலும், அவற்றின் அமலாக்கத்தை ஒழுங்குபடுத்தும் துறையாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை இருக்கும் என்று அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நடந்தவை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்த நிலையில், அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க மாநில அமைச்சரவை மார்ச் 9ஆம் தேதி முடிவு செய்தது.
இது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். இரண்டாவது முறையாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“இதுபோன்ற விவகாரத்தில் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில பட்டியலில் அதற்கான உரிமை உள்ளது. அந்த அதிகாரத்தின்படி இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி திருப்பி ஆளுநருக்கே அனுப்புவோம். ஏற்கெனவே இது பற்றி நீதிமன்றங்கள் தெளிவாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளன,” என்று அவர் மேலும் விவரித்தார்.
மசோதா விவகாரத்தில் ஒரே காரணத்தை மீண்டும், மீண்டும் வேறு மாதிரியாகக் கூறி ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
என்ன சொல்கிறார் ஆளுநர்?
முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் குறிப்பிட்டிருந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மசோதாவை திருப்பி அனுப்ப மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தியுள்ளார் ஆளுநர். அது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியது:
முதலாவதாக இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வரும் விஷயம் என்பதால் அதை மாநில அரசு நிறைவேற்றுவது முரணானதாக இருக்கும். அத்தகைய சட்டத்தை மாநில அரசால் நிறைவேற்ற முடியாது.
இரண்டாவதாக, இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாகவும் அமையும்.
மூன்றாவதாக இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இனி என்ன நடக்கும்?
பண மசோதா நீங்கலாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதாவை மாநில ஆளுநர் தமது பரிசீலனை அல்லது ஆய்வுக்கு உட்படுத்தி ஒப்புதல் வழங்கலாம்.
ஒருவேளை அந்த மசோதாவில் விளக்கங்கள் தேவைப்பட்டால் அதை அவர் அரசிடம் கேட்டுப் பெறலாம். அந்த மசோதா திருப்தி அளிக்கவில்லை என்றால் அதை அவர் அரசுக்கே திருப்பி அனுப்பலாம்.
ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் மசோதா, ஆளுநரின் யோசனைகளுடன் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதற்கு அவர் ஒப்புகை வழங்குவது கட்டாயமாகும்.