சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று உகாதி என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற்குறிப்புகள், இரங்கல் தீர்மானத்தை வாசிப்பார்.
அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்துவார்கள். பின்னர் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குகிறது. வழக்கமாக, சட்டசபை தொடங்கியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை. அதற்கு பதிலாக நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு பொது மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறிப்பாக, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டதால். மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்கிறார். பின்னர் மசோதாவை முன்னெடுத்து முதல்-அமைச்சர் மு..க.ஸ்டாலின் பேசுகிறார். ஏற்கனவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் எழுப்பிய கேள்விகள், அதற்கு அரசு கொடுத்த தெளிவான விளக்கம் பற்றியும் முதல்-அமைச்சர் எடுத்துரைக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து, தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசுகிறார்கள். பின்னர் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.
பட்ஜெட் விவாதம் நேரமில்லா நேரத்தை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுகிறார்கள். பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 27-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார். 25 மற்றும் 26-ந்தேதி சட்டசபைக்கு விடுமுறை. பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் 29-ந்தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கி, 21-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 29-ந்தேதி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை காலையிலும், போக்குவரத்து துறை மாலையிலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.