இனி 6 மணி நேரத்தில் சென்னை டூ கோவை : வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடக்கம்; 8ம் தேதி பிரதமர் சேவையை தொடக்கி வைக்கிறார்!!
சென்னை : சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது. இந்தியாவில் தற்போதைக்கு அதிவேக ரயிலாக வந்தே பாரத் உள்ளது. இது பயண நேரத்தை குறைப்பதால் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்களின் சேவை, வழித்தட எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை – சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 8ம் தேதி, பிரதமர் மோடி இந்த புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
கோவை – சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை, வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில் புதன்கிழமையை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும். இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும். இந்நிலையில், சென்னை – கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று (மார்ச் 30) தொடங்கியது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, கோயம்புத்தூரை முற்பகல் 11.40 மணிக்கு அடைந்தது.
அங்கிருந்து, இன்று நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இருமார்க்கமாகவும் இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சோதனை ஓட்டத்தில், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடைய உள்ளது.