உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு தியாகராஜசுவாமி தனக்கே உரிய அஜபா நடனத்துடன் விட்ட வாசல் வழியாக நேற்று இரவு ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இன்று காலை 7.30 மனியளவில் ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டுள்ளது.
ஆழித்தேருக்கு முன்னாள் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும் ஆழித்தேருக்கு பின்னாள் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேருக்கு முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.