பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 1,150 பேர் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மே17 இயக்கத்தினர் உள்ளிட்ட 1,150 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கருப்பு உடை அணிந்தும் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 600 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை சென்னை, நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், நகர காவல் தடுப்புச் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுப் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மோடி வருகைக்கு போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. வேணுகோபால் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த சைதாப்பேட்டை போலீசார் சட்டவிரோதமாக கூடுதல், நகர காவல் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல் சென்னை தி. நகரில் மே17 இயக்கத்தினர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் நேற்று சென்னை நகரில் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.