திருமுல்லைவாயலில் ராணுவ அதிகாரி வீடு தீப்பிடித்து எரிந்தது.
திருமுல்லைவாயலில் ராணுவ அதிகாரி வீடு தீப்பிடித்து எரிந்ததில், நகைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமானது.
ஆவடி அருகே திருமுல்லைவாயல், தேவி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 41). இவர், உத்தராஞ்சல் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவருடன் மனைவி மற்றும் குழந்தைகளும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி வசித்த வீட்டின் முதல் தளத்தை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணி வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்து ஆவடி தீயணைப்பு அலுவலர் பக்தவச்சலம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு மணி நேரம் போராடி முதல் தளத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதில், வீட்டிலிருந்து நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. புகார் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தெரியவந்தது.