போரூரில் போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் வலியுறுத்தி ட்ரையத்லான், டுயத்லான் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில்
போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில், ட்ரையத்லான், டுயத்லான் போட்டிகளை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இப்போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆவடி காவல் ஆணையரகம், இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ரன்னரஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து, போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் ட்ரையத்லான் மற்றும் டுயத்லான் ஆகிய இரு போட்டிகள் சென்னையை அடுத்த போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தார். ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வரவேற்றார். இப்போட்டிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3 பிரிவுகளில், 750 மீட்டர் தூரம் நீச்சல், 20 கி.மீ.,தூரம் சைக்கிள் ஓட்டம், 4 கி.மீ., தூரம் ஓட்டம் என, ட்ரையத்லான் மற்றும் 4 கி.மீ., தூரம் ஓட்டம், 20 கி.மீ., சைக்கிள் ஓட்டம், 2 கி.மீ., ஓட்டம் என, டுயத்லான் என நடந்த போட்டிகளில் 18 மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தினர். .
மேலும், விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் மாணவர்கள், போலீசார், பொதுமக்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, போதைப் பொருட்கள் தடுப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ட்ரையத்லான், டுயத்லான் போட்டிகளில் வென்றவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டதோடு, முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் ஆசிய விளையாட்டு போட்டி, இளையோருக்கான காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வாகினர்.
பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-
சட்டசபையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் 10 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது.
தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக முதலமைச்சர்
விளையாட்டு துறையில் நான்கு மண்டலங்களாக பிரித்து நீண்ட கால திட்டமாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார் என்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் டிரையத்லான் பெடரேஷன் தலைவர் ராமச்சந்திரன், ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேந்தர் வெங்கடாசலம், ஆவடி காவல் ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் நஜ்மல் ஹோடா, இணை ஆணையர் விஜயகுமார், கலாநிதி வீராசாமி எம்.பி, மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன், ஆகியோர் கலந்து கொண்டனர்.