Breaking News

 .

ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளருக்கான ஆய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. 

இதற்கு மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார்.இதில் தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களின் குறைகள், பிரச்சினைகளைக் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் 

 ஒப்பந்த தூய்மை பணியாளருக்கு ஊதியம், காப்பீடு அட்டை, விடுப்பு, இ.எஸ்.ஐ, இ.பி.எப் குறித்து கேட்டு அறிந்தார். அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தரவும், மாதம் மாதம் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும், கையுறை, உபகரணங்களை வழங்க நடவடிக்கைகள் வேண்டும் என கூறினர்.

பின்னர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறிய போது :- இந்தியாவில் 11 மாநிலங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையம் உள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் ஆணையம் இல்லை. ஆனால் இங்கு நல வாரியம் உள்ளது. நல வாரியத்திற்கும், ஆணையத்திற்கும் வித்தியாசம் உள்ளது. ஆணையத்திற்கு தனி அதிகாரம் உள்ளது. நல வாரியத்தில் ஆய்வு செய்ய முடியாது. நல வாரியத்தில் உறுப்பினர்களை நியமனம் செய்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரை நேற்று சந்தித்து நாடு முழுவதும் தேசிய அளவில் தூய்மை பணியாளர்களுக்கான ஆணையம் எப்படி உள்ளதோ, அதே போல தமிழகத்தில் ஆணையத்தை அமைக்க வேண்டும் என கூறியுள்ளேன். தூய்மை பணியாளருக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ. 9,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இது மாநகராட்சிளவில் மிகவும் குறைவான ஊதியமாகும். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆவடியில் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை பார்க்கும் பொழுது குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு ரூ. 711 ஊதியம் வழங்க வேண்டும் என்று உள்ளது. தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் ஒப்பந்த முறையை ரத்து செய்து, நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஒப்பந்த முறையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. வருங்கால வைப்பு நிதி முறையாக கொடுப்பதில்லை. மருத்துவ காப்பீடு செய்யப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இப்படித்தான் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாநகராட்சி மூலம் நேரடியாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கழிவுநீர் தொட்டில் இறங்கி சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு நடப்பதில், தமிழகம் தான் முதல் இடமாக உள்ளது என்றார். 

இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் விஜயகுமாரி, ஆவடி காவல் துணை ஆணையர் பாஸ்கர், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் முகமது சபியுல்லா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரிய அலுவலர் செல்வராணி, ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன், ஆவடி மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், துப்புரவு அலுவலர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், முகைதீன், துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ் உள்பட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.