ராஜீவ்காந்தி எம்.பி.பதவி நீக்கத்தை கண்டித்து பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் மறியல் ஜெயக்குமார் எம்.பி தலைமையில் 500 காங்கிரசார் கைது.
ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கே.ஜெயக்குமார் எம்.பி தலைமையில் பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.மறியலில் ஈடுப்பட்ட 500 க்கு மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவள்ளூர் தெற்கு, மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 500 க்கு மேற்பட்ட தொண்டர்கள் பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் திரண்டனர். அங்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த மறியல் போராட்டத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர்கள் டி.ரமேஷ், ஏ.ஜி.சிதம்பரம், துரை.சந்திரசேகர் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனால், சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 40 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன், ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட தொண்டர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை பேருந்துகளில் ஏற்றி ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.