திறந்தவெளியில் வைத்திருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா பறிமுதல் செய்து ப்ளாஸ்டிக் மற்றும் நியூஸ் பேப்பர் பயன்படுத்திய 16 கடைகள் மீது வழக்குப் பதிவு – உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

திறந்தவெளியில் வைத்திருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா பறிமுதல் செய்து ப்ளாஸ்டிக் மற்றும் நியூஸ் பேப்பர் பயன்படுத்திய 16 கடைகள் மீது வழக்குப் பதிவு – உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

கோவில்பட்டியில் திறந்தவெளியில் வைத்திருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா போன்றவை பறிமுதல் செய்து அழிப்பு. அனுமதியற்ற ப்ளாஸ்டிக் மற்றும் நியூஸ் பேப்பர் பயன்படுத்திய 16 கடைகள் மீது வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில் ஜோதிபாஸூ மற்றும் செல்லப்பாண்டி ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கோவில்பட்டி நகராட்சியில்  நேற்று (13.02.2024) 40 உணவு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி & சமோசா, குழம்பு  & டீ பார்சல் கட்ட வைத்திருந்த 5 கிலோ அனுமதியற்ற ப்ளாஸ்டிக் பைகளும், வடை பரிமாற வைத்திருந்த 3 கிலோ அச்சிட்ட காகிதங்களும், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 10 கிலோ நொறுக்குத் தீனிகளும், அதிக நிறமி சேர்க்கப்பட்ட 1.5 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனுமதியற்ற ப்ளாஸ்டிக்குகளையும் பொட்டலமிடப் பயன்படுத்திய சரவணக்குமார் என்பவருக்குச் சொந்தமான மகிமா டீ ஸ்டால்,
தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான செக்கடி செல்வ கணேஷ் கூல்டிரிங்ஸ், ரங்கசாமி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ லிங்கம் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ், லட்சுமணப்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான திவ்யா பரோட்டா ஸ்டால், மரிய சூசை என்பவருக்குச் சொந்தமான மரியாள் டீ ஸ்டால் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான எம்.கே சிக்கன் ஸ்டால், பொன்னுத்தாய் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரீஸ்வரி டீ ஸ்டால், சபரி என்பவருக்குச் சொந்தமான மகரம் டீ ஸ்டால், தாமரைக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ சக்தி விநாயகர் டீ ஸ்டால், பொண்ணுகோடி என்பவருக்குச் சொந்தமான மகரம் டீ ஸ்டால், குருசாமி என்பவருக்குச் சொந்தமான ஆவின் பாலகம், சமுத்திரவேல் என்பவருக்குச் சொந்தமான அண்ணா ஐஸ்லேண்ட், மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான மணி டீ ஸ்டால், பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான மகரம் டீ ஸ்டால், கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரெஸ்டாரண்ட், கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான ஆவின் பாலகம் ஆகிய உணவு வணிகர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க கோரி சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரால் நியமன அலுவலரிடத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். அவை பரிசீலனை செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனுமதியற்ற ப்ளாஸ்டிக் பயன்படுத்திய பதிவுச் சான்றிதழ் பெற்ற வணிகர்களுக்குத் தலா ரூ. 2000/-ம், நியூஸ் பேப்பர் பயன்படுத்தியவர்களுக்கு தலா ரூ.1000/-ம், பதிவுச் சான்றிதழ் இல்லாதோருக்கு ரூ.5000/-ம் அபராதம் விதிக்கப்படும். உரிமம் பெற்ற வணிகர்களுக்கு எதிரான வழக்குகள் வருவாய் அலுவலருக்கு மாற்றப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத இரண்டு கடைகள் மற்றும் சமைக்கும் இடத்தில் மாஸ்டர் புகைபிடித்ததினால் ஒரு உணவகம் ஆகியவற்றின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆணை நியமன அலுவலரால் பிறப்பிக்கப்படும்.

*தற்காலிக/நிரந்தர உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:*

1. அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.

2. சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதியற்ற செயற்கை நிறமிகளை உபயோகிக்கக் கூடாது.

3. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

4. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

5. காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற எவ்விதமான காலாவதியான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது.

6. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணமும், தூசி படியாத வகையிலும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

7. உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்றுநோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.

8. அனைத்துப் பணியாளர்களும் டைஃபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.

9. ⁠எக்காரணம் கொண்டும் நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்கள் அல்லது அனுமதியற்ற ப்ளாஸ்டிக்குகளை உணவுப் பொருட்களைப் பொட்டலமிட/விநியோகிக்கப் பயன்படுத்த கூடாது.

மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )