Breaking News
கேப்டன் இன்னிங்ஸ்: ஜோ ரூட் 184 நாட் அவுட்; இங்கிலாந்து 5 விக். இழப்புக்கு 357 ரன்கள்

கேப்டனாக முதல்நாளில், முதல்நாளே கேப்டனாக, சரிவிலிருந்து இங்கிலாந்தை மீட்ட ஜோ ரூட், 184 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் முதல்நாளில் தன் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் என்று வலுவான நிலையை நோக்கிச் செல்வதை உறுதி செய்தார்.

லார்ட்ஸில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பிலாண்டரின் அருமையான பந்து வீச்சில் அவரிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்களை எடுத்தது.

ஆனால் கேப்டன் ஜோ ரூட் 227 பந்துகளில் 26 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 184 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், தைரியசாலிகளுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்பதற்கேற்ப அவரது ஆட்டம் அமைந்தது. இதற்கு முன்னால் கேப்டனாக முதல்நாளே 150 ரன்களை எடுத்தவர் ஒரேயொருவர்தான். 2010-ல் அலிஸ்டர் குக் வங்கதேசத்துக்கு எதிராக 173 ரன்களை எடுத்த சாதனையை ஜோ ரூட் முறியடித்தார்.

ஆனால் கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிக ரன்களை எடுத்த சாதனை நியூஸிலாந்து கேப்டன் கிரகாம் டவ்லிங்கைச் சார்ந்த்து. இவர் இந்தியாவுக்கு எதிராக 1968-ல் 239 ரன்களைக் குவித்ததே இதுவரை கேப்டன்சி சாதனையாக இருந்து வருகிறது.

வெர்னன் பிலாண்டரின் 3 விக்கெட் ஸ்பெல்லுக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 114 ரன்களைச் சேர்த்து அணியை மீட்டனர்.

16 ரன்களில் ஜோ ரூட் இருந்த போது டுமினி ஒரு கேட்சை விட்டார். பிறௌ 149 ரன்களில் கேசவ் மஹராஜ் நோ-பாலில் ஸ்டம்ப்டு ஆனார் ஜோரூட். ஸ்டோக்ஸ் 44 ரன்களில் இருந்த போது மோர்கெல் பந்தில் பவுல்டு ஆனார், ஆனால் அது நோ-பால். குக் 3 ரன்களி பிலாண்டரின் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தில் வெளியேறினார். கீட்டன் ஜென்னிங்ஸ் 8 ரன்களில் பிலாண்டரிடம் எல்.பி.ஆனார். இவர் கேரி பாலன்ஸிடம் ரிவியூ செய்யலாமா என்று கேட்டு தவறிழைத்தார், ரிவியூ கேட்டிருந்தால் இது லெக் ஸ்டம்பைத் தவற விட்டிருப்பது தெரிய வந்திருக்கும். உடனேயே 3-வது விக்கெட்டையும் இழந்திருக்கும் இங்கிலாந்து, ஆனால் ரூட், ரபாடா பந்தில் அடித்த புல் ஷாட் ஐடன் மகராம் தலைக்கு மேல் சென்று பவுண்டரி ஆனது. கேரி பாலன்ஸ் கடும் விமர்சனங்களுடன் அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு பதில் கூறாமல் 20 ரன்களில் மோர்கெலிடம் எல்.பி.ஆனார். உணவு இடைவேளைக்கு முன்னதாக 10 ரன்களில் பிலாண்டர் பந்தில் பேர்ஸ்டோ எல்.பி.ஆனார்.

பென் ஸ்டோக்ஸ் தன் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்து, ரபாடா பந்தை மிக அருமையாக நேர் டிரைவ் பவுண்டரி அடித்தார். ரூட், ஸ்டோக்ஸ் அரைசதக் கூட்டணியில் ஸ்டோக்ஸ் 32 ரன்கள் பங்களிப்புச் செய்தார். மஹராஜை ஒரு சிக்ஸ் அடித்தார், இதனிடையே ஜோ ரூட் 89 பந்துகளில் தனது 28-வது அரைசதத்தை எடுத்து முடித்தார். ஸ்டோக்ஸ் 56 ரன்களில் ரபாடாவிடம் வீழ்ந்தார். 190/5 என்ற நிலையிலிருந்து மொயின் அலி, ஜோ ரூட் இணைந்து ஆட்டமிழக்காமல் 357/5 என்று முதல்நாள் ஆட்டத்தில் கொண்டு சென்றனர். மொயின் அலி 61 ரன்கள் எடுத்தும் ரூட் 184 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

கடைசியில் மொயின் அலியும், ஜோ ரூட்டும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுடன் விளையாடினர். ரபாடா 94 ரன்களை விட்டுக் கொடுத்தார், மஹராஜ் 107 ரன்கள் விளாசப்பட்டார். இன்று ஆட்டத்தின் 2-வது நாள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.