ஜி.எஸ்.டி.,யால் மருந்துகள் விலை உயராது : உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் உறுதி
”சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால், 80 சதவீத மருந்துகளின் விலை உயராது,” என, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தமிழக தலைவர் ஜெயசீலன் கூறினார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய மருந்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது. கருத்தரங்கை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 64 அரங்குகள் அமைக்கப்பட்டு, மருந்து வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தமிழக தலைவர் ஜெயசீலன்
கூறியதாவது: ஜி.எஸ்.டி., வரியால், 80 சதவீத மருந்துகளின் விலை உயராது. ஆனால், அடுத்த ஆண்டில், 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது, தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டில் வரும், 20 சதவீத உயிர் காக்கும் மருந்துகளின் விலை, 2.3 சதவீதம் உயரும். ஆன்லைனில் மருந்துகள் விற்பனை குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து, மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. டாக்டர்கள் சீட்டில் எழுதப்படாத மருந்துகளை, ஆன்லைனில் விற்க அனுமதி வழங்க வேண்டும் என, கருத்து தெரிவித்துள்ளோம். இதுகுறித்த வழிமுறைகள், ஓரிரு மாதங்களில் வரும். தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வரியால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, ஓரிரு நாட்களில்
சரியாகி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
உரங்கள் விலை கிடுகிடு : ஜூலை, 1 முதல், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி அமலாகி உள்ளது. அதில், உரங்களுக்கு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உரங்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. இதற்கு முன், 284 ரூபாய்க்கு விற்ற, 50 கிலோ யூரியா, 295 ரூபாய்; 1,065 ரூபாய்க்கு விற்ற, டி.ஏ.பி., 1,105 ரூபாய்; 550 ரூபாய்க்கு விற்ற, எம்.ஓ.பி., 579 ரூபாய்; 650 ரூபாய்க்கு விற்கப்பட்ட அமோனியம் சல்பேட், 675 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உரங்களின் விலை, மூட்டைக்கு, 11 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகளின் சாகுபடி செலவு சற்று அதிகரிக்கும். உர தயாரிப்பு நிறுவனங்கள், முறையாக அறிவிப்பு வெளியிட்டு, விலையை உயர்த்தியுள்ளன. விலையை குறைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.