காஸ்ட்ரோ: புரட்சி இயக்கம் முதல் ‘638 கொலை முயற்சி’ முறியடிப்பு வரை
தி இந்து’ நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘கிடுகிடுத்த கியூபா’ தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே…
அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).
அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.
அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.
இளம் வழக்கறிஞர் ஃபிடல் காஸ்ட்ரோ!
கியூபாவில் தனது ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா. சில வருடங்கள் தான். கியூபாவாசிகள் ஸ்பெயினுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக்காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்கா பணிந்தது. கியூபா தன்னைத் தானே ஆளட்டும் என்று விட்டுக் கொடுத்தது.
ஆனால் ‘கியூபாவிலுள்ள காண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக் குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்’ என்பது போன்ற நிபந்தனைகளை விதித்தது. அன்றைய அவசரத் துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது.
படிஸ்டா என்பவர் சுதந்திர கியூபாவின் அதிபரானார். தான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்பித்த போது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.
இதைக் கண்டு குமுறினார் ஓர் இளம் வழக்கறிஞர். குறிப்பாக வெளிநாட்டு முதலீடு களை படிஸ்டா வரவேற்பதற்கு எதிர்ப்பு காட்டினார். படிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானவுடன், மெக்ஸிகோவுக்குச் சென்று திட்டங்களைத் தீட்டிய அந்த இளம் வழக்கறிஞர் ஃபிடல் காஸ்ட்ரோ!.
யாருக்கும் இல்லாத பெருமை
யாருக்கும் இல்லாத ஒரு பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர். 1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.
படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.
1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.
ஃபிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும். இந்தக் காலகட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டாலும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
கல்லூரிப் பருவத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை. என்றாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.
ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற்கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் ஃபிடல் காஸ்ட்ரோ.
இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)
ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று ‘இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.
அப்போது ஃபிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு அடுத்த ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.
கம்யூனிஸ ஈர்ப்பு
கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.
கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!
பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.
கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. ஃபிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.
வானொலி வர்ணனையாளராக…
ஆர்டொடாக்ஸோ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதுவும் அந்தக் கட்சியின் தலைவராக இருந்த எடுவார்டோ சிபாஸ் என்பவரை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
இந்த இடத்தில் எடுவார்டோ சிபாஸ் குறித்து சில விஷயங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் ஒரு போதும் கியூபாவின் ஆட்சித் தலைவர் ஆனதில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் (1940-ல் இருந்து அவர் மறைந்த 1951 வரை என்று வைத்துக் கொள்ளலாம்) அவர் கியூபாவின் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.
கியூபாவின் மிகக் கவர்ச்சிகரமான வானொலி வர்ணனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர். அப்போது அரசின் கொள்கைகளைப் பற்றி அழகாக விமர்சித்து பலரது மனங்களை மாற்றினார். முக்கியமாக கியூபாவின் ஊழல் அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தினார்.
கறைபடாத கைகள்…
இறுதிவரை கறைபடாத கைகளுடன் வாழ்ந்தார். அவரது அரசியல் எதிரிகளின் சொத்து வகைதொகை இல்லாமல் ஏற, சிபாஸின் சொத்துகள் இறங்குமுகத்தில் இருந்தன. தன் அப்பாவால் கட்டப்பட்ட வீடுகளை விற்றுத்தான் 1948-க்கான அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். (பின்னர் 1933 புரட்சி, படிஸ்டாவுக்கெதிரான போராட்டம் என்று பல விதங்களில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது). இப்படி ஒரு பின்னணி கொண்ட சிபாஸினால் ஈர்க்கப்பட்டுதான் அவரது கட்சியில் சேர்ந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.
கியூபாவின் தலைநகரான ஹவானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அரசியலில் ஆர்வம் அப்போதே கொழுந்து விட்டெரிந்தது. 1952ல் அங்கு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அரசை ராணுவத் தலைவர் படிஸ்டா கைப்பற்றியதால் பொதுத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.
இதன் விளைவாகவோ என்னவோ ஜனநாயகம் என்பதை ஏற்க மறுத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. ஆயுதப் புரட்சிதான் சரியான வழி என்று தீர்மானித்தார். 1953ல் இவரும் இவர் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவும் இணைந்து படிஸ்டா அரசின்மீது தாக்குதல் நடத்த, கிடைத்தது ஆட்சி அல்ல. 15 வருட சிறை தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மெக்ஸிகோவுக்கு தப்பிச் சென்றார் ஃபிடல் காஸ்ட்ரோ. அங்கு அர்ஜென்டினாவைச் சேர்ந்த மார்க்ஸியத் தலைவர் சே குவாராவின் நட்பும், ஆதரவும் கிடைத்தது.
புரட்சி இயக்கம்
‘ஜூலை 26 இயக்கம்’ என்பது ஃபிடல் காஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டாவுக்கு எதிரானது. சொல்லப் போனால் அவரைப் பதவியிலிருந்து இறக்கு வதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே.
சாண்டியாகோ நகரில் இருந்த அரசின் ராணுவப் பகுதியின்மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்குதலை நடத்தியது ஜூலை 26, 1953 அன்று. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்து விட்டது. (இந்தத் தாக்குதல் வெற்றிகரமானதாக இல்லை என்பது வேறு விஷயம்). மெக்ஸிகோவிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. படிஸ்டாவின் ஆட்சியை நீக்குவதற்காக கட்டுப்பாடு நிறைந்த கெரில்லா படையாக இது மாறியது.
படகுகளின் மூலமாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்கத்தினர் கியூபாவை அடைந்தனர் இந்த இயக்கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்டப் பகலில் இவர்கள் வந்து இறங்கியதால், கியூபாவின் விமானப்படை இவர்களின் மீது தாக்குதல் நடத்தியது. தவிர இந்த அணியினர் இரண்டாகப் பிரிந்துவிட்டனர்.
உணவுகூட போதிய அளவில் கிடைக்கவில்லை. அரசு ராணுவத்தினரால் பலரும் கொல்லப்பட்டனர். சே குவாரா கழுத்தில் சுடப்பட்டார். என்றாலும் காயம் பட்ட சக கெரில்லா வீரர்களுக்கு அவர் தொடர்ந்து மருத்துவ உதவிகளைச் செய்தார். (அவர் மருத்துவம் படித்தவர்).
புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கொல்லப்பட்டவர்களில் ஃபிடல் காஸ்ட்ரோவும் ஒருவர் என்று தவறாக நம்பிய படிஸ்டா அவசரமாக இதை அறிவிக்கவும் செய்தார். பிறகுதான் உண்மை புரிந்தது. இதுதான் கியூபா புரட்சியின் தொடக்க கட்டம். போகப்போக இது வலுவடைந்தது.
சியெரா மாஸ்ட்ரா என்பது கியூபாவின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர். இதைத்தான் தங்களது முக்கிய களமாகத் தேர்ந்தெடுத்தனர் ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும். இந்த மலைப் பகுதியில் மறைந்தபடிதான் படிஸ்டாவின் ராணுவ வீரர்கள்மீது சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
நடுநடுவே சிறு சிறு ராணுவப் பகுதிகள்மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள ஆயுதத் தளவாடங்களை கடத்தினார்கள். அதே சமயம் தங்களால் தாக்கப்பட்ட ராணுவத்தினருக்கு மருத்துவ உதவிகளையும் இவர்கள் அவ்வப்போது செய்து வந்தனர்.
மறுபுறம் கியூபாவின் காவல்துறை இரும்புக்கரத்தோடு செயல்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் அன்டோனியோ, ஃபிராங் பயஸ் ஆகியோரும் அந்தப் புரட்சிக் குழுவின் அபிமானத்தைப் பெற்ற தலைவர்களாக இருந்தனர். ஆனால் நடந்த தொடர் தாக்குதல்களில் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுவிட, இயக்கத்தின் போட்டியற்ற சிங்கிள் தலைவரானார் ஃபிடல் காஸ்ட்ரோ.
உள்ளூரில் கடும் தணிக்கை என்பதால் ஃபிடல் காஸ்ட்ரோவின் கருத்துகள் மக்களை அடையவில்லை. எனவே கில்லாடி ஃபிடல் காஸ்ட்ரோ வெளிநாட்டு ஊடகங்களைத் தொடர்பு கொண்டார். நியூயார்க் டைம்ஸ் இதழில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்முகம் வெளியானதும் அவரது புகழ் மிகவும் பரவியது.
1958ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கம் மேலும் வலிமை பெற்றது. வேறுவழியின்றி ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கியது. மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்வொன்றாக புரட்சி இயக்கத்தின் கைவசம் ஆயின.
படிஸ்டாவுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு சரிந்து கொண்டிருந்தது. அவரது கடும் தகவல் தணிக்கைமுறை மற்றும் பிடிக்காதவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் போக்கு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்கள். இதை அறிந்த அமெரிக்கா படிஸ்டா ஆட்சிக்குத் தாங்கள் அளித்து வந்த ஆயுத உதவிகளை நிறுத்திக் கொண்டது.
வீழ்ந்தது படிஸ்டாவின் அரசு
எதிர்க்கட்சிகள் பொது வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட, படிஸ்டா ஆக்ரோஷம் கொண்டார். நாட்டின் எந்தப்பகுதி மக்களெல்லாம் புரட்சியாளர்களுக்கு உதவுகிறார்கள் என்று எண்ணினாரோ அந்தப் பகுதிகளில் எல்லாம் ‘ஆபரேஷன் வெரானோ’ என்று பெயரிட்ட தாக்குதலின் மூலம் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சி இயக்கத்தை முழுவதுமாக அழிப்பதுதான் அவரது திட்டம்.
ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக படிஸ்டாவால் நினைத்ததை நடத்திக் காட்ட முடியவில்லை. ராணுவத்தினர் இதனால் மனச்சோர்வு அடைய, காஸ்ட்ரோ புது உற்சாகம் பெற்றார். படிஸ்டாவின் ராணுவம் தோல்வியடைய முக்கிய காரணம் அவர்களுக்கு கெரில்லா போர்முறையில் போதிய அனுபவம் இல்லாததுதான்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் அணியைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு பெருகியது. இது போதாதென்று கியூபா நாட்டு ராணுவத்தைச் சேர்ந்தவர்களிலேயே கணிசமானவர்கள் ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மக்களின் ஆதரவை இழந்த படிஸ்டாவை இனி ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து விட்டது. என்றாலும் ஃபிடல் காஸ்ட்ரோவை அது ஆதரிக்கத் தயாராக இல்லை. தனது பிரதிநிதி கான்டில்லோ என்பவரைத் தேர்ந்தெடுத்தது. இவர் கியூபாவின் ராணுவத் தளபதியாக ஒரு காலத்தில் இருந்தவர். ஆனால் ராணுவத் தலைவராக இருந்த படிஸ்டா, ஆட்சியைக் கைப்பற்றியபோது இவர் அதற்குத் துணை நிற்கவில்லை.
கான்டில்லோ, ஃபிடல் காஸ்ட்ரோவோடு ஒரு ரகசிய சமாதான உடன்படிக்கைக்கு வந்தார். (அப்போதே அவர் தந்திரமாகச் செயல்பட்டார் என்பதுதான் உண்மை). ‘ஆட்சிக்கு எதிரான செயல்களை ஃபிடல் காஸ்ட்ரோ அணி மேற்கொள்ளக் கூடாது. அமைதியான முறையில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். படிஸ்டா நிச்சயம் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தின் முன்னால் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்’. இது கான்டில்லோ அளித்த வாக்குறுதி. ஆனால் நடந்ததோ வேறு.
படிஸ்டாவுக்கு ரகசியத் தகவல் பறந்தது. அவர் சத்தமில்லாமல் தலை மறைவானார் கஜானாவில் இருந்த கோடிக்கணக்கான டாலர்களோடு ஸ்பெயினுக்குச் சென்றார் என்கிறார்கள். கான்டில்லோவின் செயல்பாடுகள் இத்துடன் நின்றுவிடவில்லை. நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியான கார்லோஸ் என்பவரை அதிபர் ஆக்கினார். புதிய அரசு ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஃபிடல் காஸ்ட்ரோ கடும் கோபம் அடைந்தார். அவரது படை ஹவானாவுக் குள் நுழைந்து கான்டில்லோவைக் கைது செய்தது. இதற்கு ராணுவத்திலேயே இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ அனுதாபிகள் உதவினார்கள். 1959 ஆண்டின் தொடக்கத்தில் படிஸ்டாவின் அரசு முழுவதுமாக நீக்கப்பட்டது.
(இதற்குப் பிறகு ஜூலை 26 இயக்கம் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டது. ‘கியூபா சோஷியலிஸ்ட் புரட்சியில் இணைந்த கட்சி’ என்று பெயர் வைத்துக் கொண்டது. 1965ல் ‘கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று பெயரை மாற்றிக் கொண்டது.).
ஆரம்ப நிலை செயல்பாடுகள்…
ஃபிடல் காஸ்ட்ரோ ஊடகங்களுக்கு பல பேட்டிகளை அளிக்கத் தொடங்கினார். தாற்காலிக அதிபராக மேனுவல் உருஷியா என்பவரை நியமித்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம். ஹவானாவில் உள்ள ஹின்டல் ஹோட்டலைத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ தனது முதல் அதிகாரப்பூர்வ அலுவலக மாக்கிக் கொண்டார். ‘எனது வீடும் இதுவேதான்’ என்றார் குடும்ப வாழ்வு இல்லாத ஃபிடல் காஸ்ட்ரோ.
நாட்டில் ஊழல் குறைந்தது. கல்வி அறிவு மேம்பட்டது. பிற அரசியல் கட்சிகள் மீது தாற்காலித் தடை விதிக்கப்பட்டது. “விரைவில் பல கட்சித் தேர்தல் நடை பெறும்” என்று பொய் வாக்குறுதியை சளைக்காமல் கூறி வந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. நாட்டை ஷோசலிசப் பாதையில் திருப்ப முயற்சித்தார்.
புரட்சியை அடக்கும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை படிஸ்டா அரசு கொன்று குவித்திருந்தது. இதற்குக் காரணமானவர்களை காஸ்ட்ரோ தண்டிக்கத் தொடங்கினார். வழக்குகள் நடைபெற்றன. அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன. உள்ளூரில் இதற்கு பலத்த ஆதரவு. ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இந்த வழிமுறையை ஏற்கவில்லை.
“நாங்கள் என்ன அப்பாவி மக்களையா தண்டிக்கிறோம்? அரசியல் எதிரிகளையா பழிவாங்குகிறோம்? கொலைகாரர்களைக் கொல்கிறோம், அவ்வளவுதானே” என்று வெளிப்படையாகவே கூறினார் ஃபிடல் காஸ்ட்ரோ.
பின்னர் வெனிசுவேலாவுக்குச் சென்றார். ஒரு பெரும் தொகையைக் கடனாகப் பெறுவதும், பெட்ரோலை வாங்கிக் கொள்ளவும் திட்டமிட்டார். இரண்டுமே நடக்கவில்லை.
கொஞ்சம் சோர்வுடன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவுக்குத் திரும்பியபோது வேறொரு சிக்கல் காத்திருந்தது. கியூபாவில் உள்ள சூதாட்டக் கிடங்குகளையும் பாலியல் கூடங்களையும் மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. இதனால் எக்கச்சக்கமானவர்கள் வேலை இழந்து தவிக்கத் தொடங்கினார்கள். பிரதமராக ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டிருந்தவர் ராஜினாமா செய்து சப்தமில்லாமல் அமெரிக்கா சென்று விட்டார்.
கியூபாவின் அதிபராக…
கியூபாவின் அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு வருகை தந்தார்.
ராணுவவீரர் அணிவதைப் போன்ற ஓர் உடை, இடது கையில் ஒரு புத்தகம், சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் – இப்படி ஃபிடல் காஸ்ட்ரோ விமானத்திலிருந்து இறங்கியவுடனேயே பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். “உங்களை மாஸ்கோவின் ஏஜன்ட்டாக நாங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்களுக்கு எதிராகச் செயல் படுபவர்களை சரமாரியாகக் கொல்கி றீர்களே இதை எப்படி ஏற்க முடியும்?” என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர்.
தாங்கள் தண்டிப்பதும் கொல்வதும் கொலைகாரர்களைத்தான் என்றும் அவர்கள் தனக்கெதிராக மட்டுமல்ல, நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் என்றும் கூறினார் ஃபிடல் காஸ்ட்ரோ.
“கியூபாவில் உள்ள சர்க்கரைத் தொழில கங்களை தேசியமயமாக்கி விடுவீர்களா? அங்குள்ள அமெரிக்காவின் மூலதனத்தை முடக்கி விடுவீர்களா?” என்று பறந்தது மற்றொரு கேள்வி.
பதில் சாமர்த்தியமாக வந்தது. “நீங்கள் நினைப்பது போன்ற கம்யூனிஸ்ட் அல்ல நான். அமெரிக்காவும், கியூபாவும் எதிரிகளுமல்ல” என்று காஸ்ட்ரோ கூற, மகிழ்ந்து போனது யு.எஸ்! . ஆனால் விரைவிலேயே இந்த உறவு முழுவதும் முறிந்து விழுவது போல் சம்பவங்கள் நடந்தன.
மார்க்ஸிய, லெனின் பின்பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார செயல் முறையைத் தான் தாங்களும் பின்பற்றப் போவதாக காஸ்ட்ரோ அறிவிக்க, அதிருப்தியாளர்கள் உருவாயினர். அமெரிக்காவும் இந்த இயக்கத்துக்கு எதிர்நிலையை எடுத்தது.
கோபத்தின் உச்சிக்கே போன யு.எஸ்.
கியூபாவில் இருந்த அமெரிக்கர்களுக்குச் சொந்தமான கரும்பு வயல்களை காஸ்ட்ரோ தேசியமயமாக்கியதில்தான் முதல் பெரிய பிளவு தொடங்கியது. காஸ்ட்ரோவின் இதுபோன்ற கம்யூனிஸ நடிவடிக்கைகளை எதிர்த்துக் கணிசமானவர்கள் கியூபாவை விட்டு வெளியேறினார்கள். யு.எஸ். சென்ற இவர்களில் சிலர், அமெரிக்க விமானங்களில் ஏறி, கியூபாவின்மீது வட்டமடித்தார்கள். ‘இதென்ன விளையாட்டு?’ என்று கியூபா மக்கள் வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதே விமானத்திலிருந்து காகித மழை. அத்தனையும் காஸ்ட்ரோவுக்கு எதிராக அவரை திட்டி எழுதப்பட்ட பிட் நோட்டீஸ்கள்.
1961 ஏப்ரலில் அமெரிக்க உளவுத்து றையான சி.ஐ.ஏ.வினால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் கியூபாவைத் தாக்கினார்கள். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவதுதான் இதன் நோக்கம். ஆனால் இவர்கள் வெற்றி நீடிக்கவில்லை. மூன்றே நாட்களில் கியூபா ராணுவம் இவர்களை அடக்கி விட்டது. இந்த அடக்குமுறைக்கு கியூபாவின் அப்போதைய பிரதமரான ஃபிடல் காஸ்ட்ரோ நேரடிப் பொறுப்பேற்றார்.
அமெரிக்க உளவுத் துறையின் மூலம் அமெரிக்க அதிபர் ஜசன்ஹோவர், ஃபிடல் காஸ்ட்ரோவை ஆட்சியிலிருந்து இறக்க பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டினார். ராணுவத்தில் உள்ள புரட்சிக் குழுக்களுக்கு அமெரிக்க உளவுத்துறை கடுமையான பயிற்சி அளித்தது. இதற்குள் அமெரிக்க தேர்தல் 1960-ல் நடைபெற ஜான் கென்னடி அங்கு அதிபர் ஆனார். இவரும் கியூபா முற்றுகைக்கு தனது சம்மதத்தை அளித்தார்.
கியூபாவின் விமான தளங்களை தாக்கத் தொடங்கியது அமெரிக்கா. அது மட்டுமல்ல, அடுத்த சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் கியூபாவுக்கு ராணுவ உதவி செய்வதையும் தடுத்துவிட்டது யு.எஸ்!.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமான விரோதம் அதிகமானது. காஸ்ட்ரோவின் அரசு, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான – எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.
கோபத்தின் உச்சிக்கே போன யு.எஸ். கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டது. உடனே, கியூபாவிலுள்ள அத்தனை வியாபாரங்களையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறிவித்தார் காஸ்ட்ரோ. கியூபாவுடனான தனது தூதரகத் தொடர்புகளை அறுத்துக் கொண்டது யு.எஸ்.
இந்த சமயத்தில் கியூபாவிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் கியூபாவை முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகைக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் ஆசி இருந்தது. என்றாலும் இந்த முற்றுகையை வெற்றிகரமாக முறியடித்தார் காஸ்ட்ரோ.
அமெரிக்க எதிர்ப்பு, பெரும் பாலான ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பின்மை இரண்டையும் கியூபாவால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடிந்ததென்றால் அதற்கு முக்கிய காரணம், சோவியத் யூனியன். மார்க்கெட் விலையைவிட அதிக விலை கொடுத்து கியூபாவிடமிருந்து சர்க்கரையை வாங்கிக் கொண்டது அது. தன்னைப் போலவே கம்யூனிஸ்ட் ஆட்சி நாடு என்பதோடு அமெரிக்காவின் நேரடி எதிரி என்ற பாசம் வேறு. தவிர தடையில்லாத ராணுவ உதவிகளையும் செய்தது சோவியத் யூனியன்.
தனது இந்த நண்பனிடம் மற்றொரு உதவியையும் கேட்டுப் பெற்றது கியூபா. – அதுதான் சக்திவாய்ந்த ஏவுகணைகள். யு.எஸ். நடுங்கிவிட்டது. ‘உடனடியாக கியூபாவிடமிருந்து ஏவுகணைகளை சோவியத் யூனியன் திரும்பப் பெறாவிட்டால், போர்தான்’ என்றது. சோவியத் மெளனம் காக்க, சில நாட்கள் உலகமே பதட்ட நிலையில் ஆழ்ந்தது – வல்லரசுகளுக்கிடையே அணு ஆயுதப் போர் நடந்துவிடுமோ என்று!
கடைசியில், சோவியத் தனது ஏவுகணைகளைக் கியூபாவிடமிருந்து திரும்பப் பெற்றது. என்றாலும், பல்லாயிரக்கணக்கான தனது ராணுவ வீரர்களை கியூபாவிலேயே தங்க வைத்தது.
“இவ்வளவு தூரம் பகை முற்றிவிட்ட பிறகு, நமது எல்லைக்குள் யு.எஸ்-ஸின் கடற்படைத் தளம் மட்டும் எதற்கு? இது எங்கள் பாதுகாப்பிற்கே அபாயமாயிற்றே” என்று முணுமுணுக்கத் தொடங்கினர் கியூபா மக்கள். யு.எஸ். இதைக் காதில் போட்டுக் கொள்ளக் காணோம்.
இதற்கிடையதோன் சோவியத் யூனியன் உடைந்தது. தானே பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும்போது அது கியூபாவை எப்படி தாங்கிக் காப்பாற்ற முடியும்? கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை வேறுவழியின்றி நீக்கிக் கொண்டது ரஷ்யா. நாளடைவில் தன் ராணுவத்தையும் திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.
ஏழை நாடாகியது கியூபா
சர்க்கரை ஏற்றுமதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, ராணுவம் மற்றும் உடல் ஆரோக்கியத் துறைகளுக்குச் செலவழித்தது கியூபா. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த சில பள்ளிகளும், மருத்துவமனைகளும் கியூபாவில் உருவாயின. தென்னாப்ரிக்க ராணுவம் அங்குள்ள கருப்பு மக்களை எதிராகத் தாக்குதல் நடத்தியபோது, கியூபாவின் ராணுவம் கருப்பு மக்களை ஆதரித்தது.
ஆனால் கியூபாவில் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசைப் பற்றியோ, ஃபிடல் காஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்களில் விமர்சனம் செய்தால் கைதும், தண்டனையும் நிச்சயம் உண்டு என்ற நிலை இருந்தது. தங்கள் பேச்சுரிமை பறிக்கப்படுவதை விரும்பாத பலரும் அமெரிக்காவுக்குச் சென்றார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராக 1959 முதல் 1976 வரையிலும், அதிபராக 1976 முதல் 2008 வரையிலும் பதவி வகித்தவர். 1991-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவரது தலைமைச் சிறப்பை கேள்விக் குறியாக்கியது.
1991ல் சோவியத் யூனியன் உடைந்தது. கியூபாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் சோவியத் யூனியனுக்குதான். இந்த நிலையில் ஏற்றுமதியால் கிடைத்துவந்த நிதி கிட்டத்தட்ட நின்றுவிட்டது. சோவியத் யூனியன் கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை நீக்கிக் கொண்டதோடு ராணுவத்தையும் கியூபாவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.
போதாக்குறைக்கு அமெரிக்கா சமயம் பார்த்து தனது பொருளாதாரத் தடைகளை கியூபாவின் மீது விதித்தது. காஸ்ட்ரோ பதவி இறங்கினால்தான் தடைகளை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது அமெரிக்கா. 1990-களில் கியூபா மிக ஏழ்மையான நாடாகியது.
அதன்பின் கியூபாவின் பொருளாதாரம் மெள்ள மெள்ள மேலும் வீழ்ச்சி கண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கடல்வழியாக அமெரிக்காவுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்கினர். 1980-ல் ஒன்றேகால் லட்சம், 1994-ல் முப்பதாயிரம் என்றெல்லாம் வகை தொகையில்லாமல் அகதிகள் வந்து சேரவே அமெரிக்கா இவர்கள் வருகைக்குத் தடைபோட்டது. தங்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருந்த கியூபா மக்களை அப்படியே கடலிலேயே வளைத்துப் பிடித்து கியூபாவில் உள்ள தங்கள் கடற்தளத்துக்கு திருப்பியனுப்பத் தொடங்கிது அமெரிக்க ராணுவம்.
இடையே ஏலியன் என்ற ஆறு வயதுச் சிறுவன் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தான். கியூபாவிலிருந்து தப்பிக் கும் எண்ணத்தில் அங்கிருந்து ஏலியனை அழைத்துக் கொண்டு அவன் தாய் படகில் அமெரிக்காவுக்குக் கிளம்பினாள்.
அமெரிக்காவை நெருங்கும்போது படகு மூழ்க, அந்த விபத்தில் அந்த அம்மா இறந்துவிட்டாள். கடற்கரையோரமாக மிதந்து வந்த ஏலியனை சிலர் காப்பாற்றினர். பின்பு அவனை அமெரிக்காவில் வாழும் அவனது உறவினர்கள் அழைத்துச் சென்றார்கள்.
கியூபாவில் வசித்த ஏலியனின் தந்தை கியூபாவுக்குத் தன் மகன் திருப்பி அனுப்பப்பட வேண்டுமெனக் கூறினார். ஏலியனின் அமெரிக்க உறவினர்களோ அமெரிக்காவில்தான் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஏலியன் அங்கேயே இருக்க வேண்டும் என வாதிட்டனர். விஷயம் அரசியலாக்கப்பட்டது.
அமெரிக்க அரசு தலையிடாமல் மவுனம் சாதித்தது. “அமெரிக்க அரசு எங்கள் நாட்டுச் சிறுவனைக் கடத்திச் சென்றிருப்பதாகத்தான் இதற்கு அர்த்தம். ஏலியன் கியூபாவுக்கு அனுப்பப்படாவிட்டால், அமெரிக்கா மீது போர் தொடுப்போம்” என்று காஸ்ட்ரோ கர்ஜிக்க, பெரும் விவாதங்களுக்குப் பின் ஏலியன் அவன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அரசியல் ரீதியாக காஸ்ட்ரோ தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டாலும் கியூபாவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா என முயற்சி செய்தது கியூபா. இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது.
மக்களின் அதிருப்தியும் நம்பிக்கையும்
கியூபாவில் மேலும் பல மாறுதல்களைக் கொண்டு வந்தார் காஸ்ட்ரோ. கியூபாவின் வணிகத்தில் இணைந்திருந்த அமெரிக்காவின் பங்கை ஒட்டுமொத்தமாகக் கழற்றி விட்டார். அமெரிக்கா கொதித்தது. கியூபாவுடனான உறவை முழுவதுமாக துண்டித்துக் கொண்டது. அமெரிக்கர்களும் கியூபாவை வெறுக்கத் தொடங்கினர்.
‘ஏழைகளின் சொர்க்க பூமியாக’ விளங்கிய கியூபா பெரும் சிக்கலில் திணறத் தொடங்கியது. அரசு அளிக்கும் ரேஷன் பொருட்களை வாங்க மூச்சு முட்டும் கூட்டத்தில் தினந்தோறும் நின்று வாங்கிக் கொண்டு, தள்ளாடியபடி திரும்பினர். பல குடும்பங்கள் தங்கள் ஷூக்கள், அலமாரிகள் போன்றவற்றை எல்லாம்கூட விற்று குச்சிக்கிழங்கு வாங்கித் தின்ற உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளத் தொடங்கினர்.
‘என்ன செய்ய? எல்லாவற்றையும் அவர் கண்ட்ரோல் செய்கிறார்” என்று சொல்லி தாடியை உருவுவதுபோல சைகையிலேயே காஸ்ட்ரோவை மனத்தாங்கலுடன் குற்றம்சாட்டத் தொடங்கினர் மக்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இயந்திரங்களை இயக்க வைக்க எரிபொருள் இல்லை. வாங்கவோ, சரியாக விநியோகிக்கவோ வழியில்லாமல் விளைந்த பயிர்கள் எல்லாம் வயல்களிலேயே வாடத் தொடங்கின.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காஸ்ட்ரோ ஒரு முக்கியக் காரணம் என்ற கடும் விமர்சனத்தை முன்வைத்தாலும் அந்தச் சரிவிலிருந்து கியூபாவைக் கடைத்தேற்றவும் அவர் ஒருவரால்தான் முடியும் என்று மக்கள் நம்பினார்கள்.
வளைந்து கொடுக்கத் தொடங்கிய காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோ நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்கினார். ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் கியூபாவில் ஓட்டல்கள் கட்ட அனுமதி அளித்தார்.
கனடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சில கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தார். ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட்டார். முதல் முறையாக அங்கு வருமானவரி அறிமுகமானது.
சோவியத் யூனியனின் மானியங்கள் நின்று போனதில் கியூபாவில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட, நிலைமை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அமெரிக்கா உதவ முன்வந்தது. அதாவது அது கியூபா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கிக் கொள்ளவில்லை. ஆனால் உணவு, மருந்து போன்றவற்றை நன்கொடையாக அளிப்பதாகச் சொன்னது. அதை ஏற்றுக் கொள்ள கியூபாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. 1993 வரை இந்த மறுப்பு தொடர்ந்தது.
ரஷ்யாவுக்குப் பிறகு கியூபாவுக்கு ஆதரவான நாடுகளாக சீனா, வெனிசுவேலா, பொலிவியா ஆகியவை ஓரளவு விளங்கின. முக்கியமாக வெனிசுவேலாவும், பொலிவியாவும் பெட்ரோல் விஷயத்தில் கியூபாவுக்குக் கை கொடுத்தன.
ஒருகட்டத்தில் காஸ்ட்ரோ தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது உடல் நலம். ஒருவித செரிமான நோய் எனலாம். பெருங்குடலின் உட்பகுதி தொற்றுகளால் பாதிக்கப்பட்டு அங்கே சிறு சிறு பைகள் போன்ற அமைப்புகள் உருவாகிவிட்டிருந்தன. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் காஸ்ட்ரோ. இந்த அறுவை சிகிச்சை 2006-ல் நடைபெற்றது. இதைச் செய்து கொள்வதற்கு முன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடமைகளை தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
உலகெங்கும் பரபரப்பு கூடியது. காஸ்ட்ரோவின் உயிருக்கே ஆபத்து என்று சிலர் கூறினார்கள். வேறு சிலரோ `உடல்நலம் சரியில்லை என்பதே பொய். வேறு ஏதோ காரணத்துக்காக இவர் ராஜினாமா செய்கிறார்’ என்றார்கள். தவிர `காஸ்ட்ரோ கடத்தப்பட்டார்” என்ற வதந்தியும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக வானொலியில் அவர் உரையாற்ற நேர்ந்தது.
பதவியில் இல்லாவிட்டாலும் பல அரசியல் முடிவுகளை காஸ்ட்ரோ எடுத்தார். அவர் விரல் அசைவில்தான் கியூபா அரசு என்ற நிலை தொடர்ந்தது. 2007 பிப்ரவரியில் காஸ்ட்ரோவின் உடல்நலம் முன்னேறி வருகிறது என்ற அறிவிப்பு வந்தது.
அறுவை சிகிச்சை நடைபெற்று ஒருவருடம் கூட முடியாத நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். ஹவானாவில் நடைபெற்ற கூட்டு சேரா இயக்க மாநாட்டில் கலந்து கொண்டார்.
அமெரிக்க அரசு தொடர்ந்து காஸ்ட்ரோவைக் கடுமையாக விமர்சித்து வந்தது. ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் `ஒருநாள் இறைவன், காஸ்ட்ரோவை எடுத்துச் செல்வார்’ என்றார். இவர் எப்போதுதான் சாகப்போகிறாரோ என்கிற தொனி கொண்ட வாக்கியம்!
கடவுள் நம்பிக்கை இல்லாத, காஸ்ட்ரோ இதற்கு அளித்த பதில் சுவாரசியமானது. “இப்போது புரிகிறது. தானே என்னை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க அரசின் அத்தனை கொலை முயற்சிகளிலிருந்தும் என்னைக் கடவுள் காப்பாற்றி இருக்கிறார்” என்றார்.
காஸ்ட்ரோவின் காதலி…
600-க்கும் அதிகம் என்றது காஸ்ட்ரோ தரப்பு. அமெரிக்கா மறுத்தது. விஷயம் சூடு பிடிக்கவே அமெரிக்கப் பாராளுமன்றம் இதற்காக ஒரு குழுவை நியமித்தது. பிராங்க் சர்ச் என்பவர் இந்தக் குழுவின் தலைவர் என்பதால், இந்தக் குழு சர்ச் குழு என்றே அழைக்கப்பட்டது. இதன் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்கு அப்படி ஒன்றும் ஆதரவானதாக இல்லை.
திட்டமிட்ட படுகொலைகளுக்கு பின்னணியாக இருக்கும் உயரதிகாரிகளை உளவுத்துறையின் கீழ்மட்ட ஊழியர்கள் சிறிதும் காட்டிக் கொடுக்காமல் இருந்ததோடு அவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவச் செய்யும் வகையிலும் செயல்பட்டார்கள் என்றது குழுவின் முடிவு. நிறைய சங்கேத வார்த்தைகள் நிறைந்த தகவல் தொடர்புகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும் கூறியது அந்த அறிக்கை.
1960லிருந்து 1965 வரை காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்ட அமெரிக்க உளவுத்துறை எட்டு முயற்சிகளைச் செய்தது என்று அறிவித்தது சர்ச் குழு. இதுவே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. காஸ்ட்ரோவை பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான ஃபேபியன் எஸ்கலண்டே என்பவர் அமெரிக்க உளவுத்துறை, காஸ்ட்ரோவை கொலை செய்ய 638 முறை முயன்றது என்றார். கியூபா அரசைக் கவிழ்க்க திட்டமிட்ட இந்தக் கொலை முயற்சிகளுக்கு `ஆபரேஷன் மங்கூஸ்’ என்றும் பெயரிடப்பட்டிருந்ததாம்.
கொலை முயற்சி என்றால் துப்பாக்கியோ, கத்தியோ இல்லை. காஸ்ட்ரோ பயன்படுத்திய சிகாரில் விஷம் கலந்தது ஒருவகை. அவர் ஸ்கூபா டைவிங் எனப்படும் விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். இதற்கான அவர் உடையில் விஷக்கிருமிகள் நிரப்பப்பட்டன. அவரது பால்பாயின்ட் பேனாவில் விஷம் நிரம்பிய ஒரு ஊசி இணைக்கப்பட்டது.
பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட வலியே இல்லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும். ஒருகட்டத்தில் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அவர் செல்லும்போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, காஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை தன் கைக்குள் போட்டுக் கொண்டது மரிடா லொரென்ஸ் என்பவரை அவர் காஸ்ட்ரோவின் (முன்னாள்) காதலி!
“காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்”
ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத்துறை. குளிர்காலத்துக்கான க்ரீமை உடலில் தடவிக் கொள்வது காஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை காஸ்ட்ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.
ஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, காஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.
ஆக அமெரிக்காவுக்குக் கடும் ஏமாற்றம். உயிரைத்தான் எடுக்க முடியவில்லை, வேறுவிதத்திலாவது காஸ்ட்ரோவை நிலைகுலைய வைக்கலாம் என்பதற்காக அவரது பிரபல தாடியை அழித்திடும் வகையில் தாலியம் என்ற ரசாயனப் பொருள் அடங்கிய உணவுப் பொருளை வஞ்சகமாக அவரை உண்ண வைத்தார்கள்.
ஊஹூம், நடக்கவில்லை. அவர் வானொலியில் பேச வரும்போது அங்கு போதைப் பொருளை ஆவி வடிவில் பரப்பி, அவர் பேச்சு குழறலாக வெளிப்படச் செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் “கொலை முயற்சிகளிலிருந்து அதிக முறை தப்பிப்பது என்பது ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருக்குமானால், அதில் எனக்குதான் தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும்” என்றார் காஸ்ட்ரோ.
இந்தக் கொலை முயற்சிகளெல்லாம் “காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்” என்ற பெயரில் சானல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப்பட்டது.
“இதுவே என் கடைசி உரை”
மீண்டும் அதிபர் ஆவாரா காஸ்ட்ரோ என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த நிலையில், 2008-ல் அவர் வெளிப்படையான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “அதிபர் பதவியை இனி நான் ஏற்க மாட்டேன். அந்தப் பதவியில் தொடர்ந்து பல உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒரு பதவியை வகிக்க முழு உடல்நலமும் இல்லாத என்னால் சம்மதிக்க முடியவில்லை” என்றார்.
“தேசம் தொடர்பான அத்தனை முக்கிய முடிவுகளிலும் அண்ணன் காஸ்ட்ரோவை நான் கலந்து ஆலோசிப்பேன்” என்றார் ரால் காஸ்ட்ரோ. தான் சொன்னதை அரசு மசோதாகவே அவர் அறிவிக்க, 597 தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
கியூபா மக்களுடன் தொடர்ந்து மறைமுகமாக உரையாடிக் கொண்டிருந்தார் காஸ்ட்ரோ. நாளிதழ் ஒன்றிலும் தொடர்ந்து தன் எண்ணங்களைப் பதிவு செய்து வந்தார். ”என் வருங்கால உடல்நலம் குறித்துக் கவலைப்படாதீர்கள் மக்களே” என்றும் ட்வீட் செய்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சியில் மக்கள் முன் தோன்றிய ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையில் கூறியது:
“இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்தப் புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்.
கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும்.”