ரயில் பயணியரின் டிக்கெட்டுகளை பரிசோதிக்க தானியங்கி கருவி
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போன்று, பிற ரயில் நிலையங்களிலும், டிக்கெட்டுகளை, ‘ஸ்கேன்’ செய்து, பயணியரை அனுமதிக்கும் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில், தானியங்கி கதவுகள் வழியாக உள்ளே செல்ல வேண்டி இருக்கும். அப்போது, தங்களிடம் உள்ள டிக்கெட்டை, தானியங்கி கதவில் பொருத்தப்பட்டுள்ள, ஸ்கேனர் கருவியில், பயணியர் காண்பிக்க, அந்த டிக்கெட்டில் உள்ள, ‘பார் – கோட்’ உதவியுடன், தகவல்கள் சரிதானா என பரிசோதித்த பின், அந்த பயணி உள்ளே செல்லும் வகையில், கதவு திறந்து வழிவிடும்.
இதைப் போன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்த, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக, டில்லியில், பிரார் சதுக்கம் ரயில் நிலையத்தில், ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்ட தானியங்கி கதவு பொருத்தப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த பணி நிறைவடையும். இதற்கான மென்பொருளை, ரயில்வேயின் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான, சி.ஆர்.ஐ.எஸ்., தயாரித்து வருகிறது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், பிற ரயில் நிலையங்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும். இதனால், டிக்கெட் பரிசோதகர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தானியங்கி கதவு மூலம், டிக்கெட்டுகளை சோதிப்பதால், மிக விரைவில் சோதனை நடைமுறைகள் முடிந்து விடும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.