பிரிட்டனில் பெண் குழந்தை பெற்ற 21 வயது அதிசய இளைஞன்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் முதல் கர்ப்பிணியான ஆணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரிட்டனின் குளூசெஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர், ஹேடன் கிராஸ், 21. பிறப்பில் பெண்ணாக பிறந்த பெஜ்யே, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணாக உணர்ந்து வந்தார். அதைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் நிதியுதவியுடன், ஆணாக மாறும் சிகிச்சையை மேற்கொண்டார். தன் பெயரை, கிராஸ் என, மாற்றினார். இதற்கிடையே, சட்டப்பூர்வமாகவும், ஆணாக மாறினார்.
ஆணாக மாறுவதற்கான சிகிச்சை, கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், தன் சினை முட்டைகளை, தேசிய சுகாதார சேவை அமைப்பின் ஆய்வுகூடத்தில் சேமித்து வைத்திருந்தார். ஆணாக மாறுவதற்கான சிகிச்சைக்காக, இந்த அமைப்பு, ஏற்கனவே, 25 லட்சம் ரூபாயை செலவிட்டு வந்தது.
இந்நிலையில், சினை முட்டையை பாதுகாக்க, தனியாக, 3.40 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருப்பதால், தொடர்ந்து, அதை பராமரிக்க முடியாது என, அந்த அமைப்பு கூறியது. அதனால், ஆணாக மாறும் சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்திய, கிராஸ், சமூகவலைதளத்தில் அறிமுகமான ஒருவரின் விந்துவை தானமாக பெற்று, கருவுற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் கருவுற்ற கிராஸுக்கு, இந்த ஆண்டு, ஜூன், 16ல், அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆணாக மாறும் சிகிச்சையை தொடர உள்ள கிராஸ், குழந்தை, தன்னை அப்பா என்றே அழைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பிரிட்டனில் கர்ப்பமுற்று குழந்தை பெற்ற, முதல் ஆணாக கிராஸ் கருதப்படுகிறார்.
சட்டப்பூர்வமாக ஆணாக உள்ள ஒருவர், கருவுற்று குழந்தைப் பெறும் சம்பவம், முதல் முறையாக, 2008ல் அமெரிக்காவில் நடந்தது. பிறப்பில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய, தாமஸ் பீட்டி என்பவர், கருவுற்று குழந்தை பெற்றார்.