இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்: ராகுல் டிராவிட், ஜாகிர் கானுக்கு முக்கிய பொறுப்புகள்
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜாகிர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ராகுல் டிராவிட் வெளிநாட்டுத் தொடர்களுக்கான பேட்டிங் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் 11-ம் தேதி மாலைக்குள் புதிய பயிற்சியாளரின் பெயரை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாக குழுவின் தலைவர் வினோத் ராய் கூறியிருந்தார். இந்நிலையில் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நேற்றிரவு நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, இந்திய கிரிக்கெட்டின் நன்மையைக் கருதி இந்தத் தேர்வை செய்துள்ளதாக தெரிவித்தது. 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
பந்துவீச்சு பயிற்சியாளர் ஜாகிர் கான்:
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகிர் கான் (38) இதுவரை 92 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர்கள் பலரை சிறப்பான ஆட்டத்துக்கு பழக்கப்படுத்தியிருக்கிறார்.
பேட்டிங் ஆலோசகராக ராகுல்..
வெளிநாட்டுத் தொடர்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே இந்தியா ஏ அணி மற்றும் அண்டர் 19 அணிகளின் பயிற்சியாளராக இருக்கிறார்.