சீனாவுடனான எல்லை பிரச்சினையை சிக்கலாகாமல் கையாள முடியும்: இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் கருத்து
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ‘லீ குவான் யீவ் ஸ்கூல் ஆப் பப்ளிக் பாலிசி’ சார்பில் ‘இந்தியா – ஆசியான் மற்றும் பூகோள அரசியல் மாற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது இந்தியா – சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல. இரு நாடுகளுக்கும் இடையே மிக நீண்ட எல்லை (3,488 கி.மீ.) அமைந்துள்ளது. எல்லையின் எந்தப் பகுதியும் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
இதன் காரணமாக அவ்வப்போது இரு நாடுகளுக்கிடையே பிரச்சினை எழுவது வழக்கம்தான். இதற்கு முன்பு பலமுறை இதுபோன்ற எல்லைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அவற்றை சிறப்பாக கையாண்டோம்.
அதேபோல் இந்த முறையும் நல்லவிதமாக பிரச்சினையை கையாள முடியும். கருத்து வேறு பாடுகள் தகராறாக முற்றும் வகை யில் இருதரப்பும் மாற அனுமதிக் கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடானின் எல்லைகள் சந்திக்கின்றன. இந்த பகுதியில் உள்ள டோகாலா பகுதிக்கு சீனாவும் பூடானும் உரிமை கொண்டாடுகின்றன. அப் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இதனால் தமக்கு பாதுகாப்பு ரீதியில் பாதக விளைவு ஏற்படும் என கூறி, அந்தப் பணிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவுகிறது.