இ-மெயில் விபரங்களை வெளியிட்டார் டிரம்ப் மகன்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ரஷ்ய வக்கீலை சந்தித்தது தொடர்பான, இ – மெயில் விபரங்களை அதிபர் டிரம்பின் மகன், வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். தேர்தலில், ஹிலாரியை தோற்கடிக்க, ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. டிரம்ப், இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், 39, அதிபர் தேர்தலின்போது, ரஷ்யாவைச் சேர்ந்த, ஒரு வக்கீலை சந்தித்து பேசியதை ஒப்புக் கொண்டுள்ளார்’ என, அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியானது. ஹிலாரியின் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையிலான தகவல்களை வெளியிடுவது தொடர்பாக, இவர்கள் சந்திப்பில் பேசப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ரஷ்ய வக்கீலை சந்தித்தது தொடர்பான, இ — மெயில் விபரங்களை, ஜான் டிரம்ப், சமூக வலைத்தளமான, ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ளார். ‘ரஷ்ய வக்கீலுடனான சந்திப்பு, 20 நிமிடம் மட்டுமே நீடித்தது. அதில், அதிபர் தேர்தல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. அந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் கூட, எனக்கு நினைவில் இல்லை; ஏனெனில், அதை, அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக, நான் கருதவில்லை’ என, அதில், ஜான் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
தந்தை பாராட்டு : ரஷ்ய வக்கீலை சந்தித்து தொடர்பான இ – மெயில் விபரங்களை, ஜான் டிரம்ப் வெளியிட்டுள்ளதற்கு, அவரது தந்தையும், அதிபருமான, டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். ”நேர்மையான மனிதன் என்பதை, என் மகன் நிரூபித்துள்ளார். அவரது வெளிப்படையான செயலை பாராட்டுகிறேன்,” என, அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.