சசிகலாவை சிக்க வைத்த பெண் டிஐஜி ரூபா யார்?
அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்தார் என புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சிறை டிஐஜி ரூபா டி.மவுட்கில். சசிகலா வை சிக்க வைத்திருக்கும் இவரது புகார் தமிழக அரசியலில் மட்டுமல்லா மல், கர்நாடகாவிலும் அதிரடி மாற் றத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
கர்நாடக மாநிலம் தாவண கெரேவைச் சேர்ந்தவர் ரூபா. கடந்த 2000-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரூபா, தேசிய அளவில் 43-வது இடத்தையும் பிடித்தார். இந்திய காவல் பணியை விரும்பி ஏற்ற இவர், ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎஸ் பயிற்சியில் 5-வது இடத்தையும் பிடித் தார். மிகவும் துணிச்சலான ரூபா, துப்பாக்கிச் சுடுவதிலும், குதிரை ஏற்றத்திலும் வல்லவர். இதனால் பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
பாஜக தலைவர்களுடன் மோதல்
கடந்த 2000-ம் ஆண்டு பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ரூபா, கனிம வள கொள் ளையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். தனது நேர்மையின் காரணமாக அடிக்கடி பணிமாற்றம் செய்யப்பட்ட இவர், யாதகிரி, கதக், தும்கூர் உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி யுள்ளார். தார்வார் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஹூப்ளியில் அப்போதைய மத்திய பிர தேச முதல்வர் உமாபாரதி பங்கேற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது.
அப்போதைய ஹூப்ளி மாவட்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா (ஜெ.வழக்கில் தீர்ப்பளித்தவர்) அளித்த உத்தரவின்பேரில், உமாபாரதியை துணிச்சலாக கைது செய்தார். இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையராக பணியாற்றிய ரூபா, அரசியல்வாதிகளுக்கு தேவையில்லா மல் வழங்கப்பட்ட போலீஸ் பாது காப்பை வாபஸ் பெற்றார். குறிப்பாக அப்போதைய முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில் உரிய அனுமதி இல்லாமல் இடம்பெற்ற வாகனங்களைத் திரும்ப பெற்றார்.
அண்மையில் அரசியல் கருத்துக் கள் தொடர்பாக மைசூரு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா உடன் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் கடும் விவாதம் செய்தார். ஒருகட்டத்தில் ரூபாவுக்கு பதில் அளிக்க முடியாமல் பிரதாப் சிம்ஹா தனது ஃபேஸ்புக் பதிவை நீக்கினார்.கர்நாடக குற்றப்பிரிவு ஆணையராக பணியாற்றியபோது, அப்போதைய உயர் அதிகாரியிடம் ரூபா நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய விவகாரம் காவல் துறை வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
எவருக்கும் அஞ்சாதவர்
கடந்த 2010-ம் ஆண்டு ரூபா கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி மனீஷ் மவுட்கில்லை மணந்தார். இவர் கர்நா டக அரசின் ஊரக குடிநீர் விநியோகத் துறை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த மாத இறுதியில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியாக பொறுப்பேற்ற இவர், பத்தே நாட்களில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இதனால் சிறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை நடத்தியது தொடர்பாக சத்தியநாராயண ராவ் ரூபாவுக்கு 2 மெமோ (விளக்கம்) அளித்தார். இருப்பினும் தளராத ரூபா, சத்தியநாராயண ராவுக்கு எதிராகவே, ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் சாதாரண பெண்ணாக ரூபா வலம் வருவார். சிறுவயதில் கற்றுக்கொண்ட பரத நாட்டியத்தையும், இந்துஸ்தானி இசையையும் அவ்வப் போது அரங்கேற்றுவார். கன்னட முன்னணி தினசரி இதழ்களில் ரூபா கட்டுரை எழுதி வருகிறார். காவல் துறை சீர்திருத்தம், பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனிதாபிமானம் தொடர் பாக அவர் எழுதும் கட்டுரைகளுக்கு வரவேற்பு கிடைக்கிறது. தற்போது தனது உயர் அதிகாரிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியதால், நாடு முழுவதும் அறியப்படும் ஆளுமையாக ரூபா உயர்ந்துள்ளார்.