கதிராமங்கலத்தில் இருந்து போலீஸார் வெளியேறாவிட்டால் ஊரைவிட்டு வெளியேற கிராம மக்கள் முடிவு: 6-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்தில் முகாமிட்டுள்ள போலீஸார் ஊரை விட்டு வெளியேறாவிட்டால், கிராம மக்கள் ஊரைவிட்டு வெளி யேறுவது என காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கதிராமங்கலம் அய்யனார் கோயில் பகுதியில் பொதுமக்கள் தினமும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 6-வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கிராம மக்களுடன் அவ்வூர் பள்ளி, கல்லூரி மாண வர்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கூறியதாவது: கதிராமங்கலத்தில் போராடும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
அவர்களை வரவிடாமல் தடுக்கும் விதமாக கதிராமங்கல கிராம எல்லைகளான திருக்கோடிக் காவல், சிவராமபுரம், கொடியாலம் ஆகிய இடங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஊருக்குள் மக்களின் நடமாட்டத்தை உளவுப்பிரிவு போலீஸார் கண்காணித்து அரசுக் குத் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
எனவே, கதிராமங்கலத்தில் முகாமிட்டுள்ள போலீஸார் அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்றனர்.