‘ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை’
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இதை மறுத்து, குர்து மக்கள் படையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி, லாஹூர் தலாபானி கூறியதாவது: அல்பாக்தாதி, அல் – குவைதா இயக்கத்தில் இருந்து வந்தவன். அதனால், அவர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியும். மொசூல் நகரில் நடந்த சண்டையில், அல்பாக்தாதி கொல்லப்படவில்லை. அவன், சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அல்பாக்தாதி உயிருடன் இருப்பதை, 99 சதவீதம் உறுதி செய்துவிட்டோம். தற்போது, ஈராக்கில் இருந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துரத்தி வருகிறோம். அடுத்த, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த அமைப்பை முழுமையாக அழித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.