தமிழகத்தில் 2,500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை
தமிழகத்தில் புதிதாக 2,500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த சகாய பனிமலர் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 144 பின்னடைவு பணியிடங்கள் உட்பட 1,223 அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் 10.11.2016-ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 12.2.2017-ல் நடைபெற்றது. இத்தேர்வின் அடிப்படையில் 28.2.17 முதல் 15.3.2017 வரை சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சலில் நான் பதிவு செய்யாததால் தேர்வு எழுத முடியவில்லை. அரசு மருத்துவர் பணித் தேர்வு தொடர்பான அடுத்த அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், முந்தைய அறிவிப்பை அடிப்படையாக வைத்து 5.7.2017 முதல் 18.7.2017 வரை 2,500 அரசு மருத்துவர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமனம் மேற்கொள்வதாக இருந்தால் அது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்தடுத்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றால் பலர் பாதிக்கப்படு வர். எனவே முறையாக அறிவிப்பு வெளியிட்டு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி அரசு மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும். 10.11.2016-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் 2,500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு தடை விதித்தும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு அரசு மருத்துவர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். விசாரணைக்குப் பிறகு, கடந்த ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில் அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.