அரசு வழக்கறிஞர் நியமனம்: ரத்து செய்யக் கோரிய வழக்குகள் சென்னைக்கு மாற்றம்
மதுரை உட்பட பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் தாக்கலான அனைத்து மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
கரூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் விதிப்படி நடைபெறவில்லை என்றும், அரசு வழக்கறிஞர் பதவிக்குரிய தகுதிகள் இல்லாதவர்கள், ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர்கள், சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞராகப் பதிவு செய்தவர்களும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு வழக்கறிஞர் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, 5 மாவட்டங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
பின்னர் விருதுநகர், மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது இதே போன்ற கோரிக்கைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இதனால் இந்த வழக்குகளையும் சென்னைக்கு மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந் நிலையில் அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள 7 வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் (நீதி) இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.