டிரம்ப் மகன் சர்ச்சை: அமெரிக்க அரசு விளக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன், ஜான், ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்து பேசியது, சட்ட விரோத செயல் அல்ல,” என, அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில், 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் சார்பில், ஹிலாரியை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
தேர்தலில், ஹிலாரியை தோற்கடிக்க, ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது பற்றி, அமெரிக்க புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், 39, அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவைச் சேர்ந்த, வழக்கறிஞரை சந்தித்து பேசியதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, ‘அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு விவகாரத்தில், ஜானின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும்’ என, ஜனநாயக கட்சி கோரி வருகிறது.
இது குறித்து, அதிபர் டிரம்ப் சார்பில், அமெரிக்க அரசின்
அட்டர்னி ஜெனரலாக செயல்படும், ஜாய் செல்லோவ் கூறியதாவது:
ரஷ்ய வழக்கறிஞருடான சந்திப்பு குறித்து, ஜான் ஏற்கனவே விளக்கமளித்து விட்டார். ஆனால், அமெரிக்க ஊடகங்கள் இது பற்றி புதுப் புது செய்திகளை வெளியிட்டு, மக்களை
குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த சந்திப்பு சட்ட விரோதமான செயல் அல்ல; இது பற்றி விசாரிக்க வேண்டிய தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.