திபெத்தில் சீன ராணுவ போர் ஒத்திகையால் பரபரப்பு
சிக்கிம் மாநிலத்தில், டோகலாம் பகுதியில், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளால் பதற்றம் காணப்படும் நிலையில், திபெத்தில், சீன ராணுவம், ஏவுகணைகள், கையெறி குண்டுகளை பயன்படுத்தி, போர் ஒத்திகையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிமில், டோகலாம் பகுதியில், சீன ராணுவம் சாலை அமைக்க முற்பட்டதை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கு,
சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி வருவதால், பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், சீனாவின், திபெத் தன்னாட்சி பகுதியில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், போர் ஒத்திகையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியா – சீனா எல்லையை ஒட்டி பகுதிகளில், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும், சீன ராணுவத்தின் திபெத் ராணுவப் பிரிவு வீரர்கள், இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். ஒத்திகையின்
போது, வீரர்கள், பீரங்கி எதிர்ப்பு கையெறி குண்டுகளையும், பாதுகாப்பு அரண்கள் மீது தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் பயன்படுத்தி உள்ளனர்.
எதிரி நாட்டின் போர் விமானங்களை கண்டறியும், ரேடார்
கருவியை பயன்படுத்தி, இலக்குகளை தாக்கியழித்து,
ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி, 11 மணி நேரம் நடந்ததாக தகவல்கள்
கூறுகின்றன.
சீன ராணுவம் மேற்கொண்டுள்ள போர் ஒத்திகையால்,
அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா – சீனா இடையே, ஜம்மு – காஷ்மீர் முதல், அருணாச்சல் வரை, 3,488 கி.மீ., எல்லை உள்ளது. இதில், 220 கி.மீ., பகுதி, சிக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.