ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை வெற்றிக்கு 218 ரன் தேவை
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இலங்கை அணி வெற்றிபெற 218 ரன்கள் தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன.
இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 356 ரன்களையும், இலங்கை அணி 346 ரன்களையும் எடுத்தன. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடவந்த ஜிம்பாப்வே அணி, 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்திருந்தது. சிக்கந்தர் ராசா 97 ரன்களுடனும், வாலர் 57 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
நேற்று காலை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 160 பந்துகளில் சிக்கந்தர் ராசா தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் 289 ரன்களாக இருந்த நிலையில் பெரேராவின் பந்தில் தரங்காவிடம் கேட்ச் கொடுத்து வாலர் (68 ரன்கள்) ஆட்டம் இழந்தார். வாலர் ஆட்டம் இழந்த சிறிது நேரத்திலேயே சிக்கந்தர் ராசா 127 ரன்களில் வெளியேறினார். அவரது சிறப்பான பேட்டிங்கின் உதவியால் ஜிம்பாப்வே அணி, 2-வது இன்னிங்ஸில் 377 ரன்களை எடுத்தது. இந்த இன்னிங்ஸில் இலங்கை அணிக்காக ரங்கனா ஹெராத், 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் தரங்கா 27, கருணாரத்னே 49, சந்திமால் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர இறுதியில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்திருந்தது. குஷால் மெண்டிஸ் 60 ரன்களுடனும், மேத்யூஸ் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 218 ரன்கள் தேவைப்படுகின்றன. ஆட்டத்தின் இறுதி நாளான இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இலங்கை அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும். இலங்கை அணியைப் பொறுத்தவரை 2006-ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 2-வது இன்னிங்ஸில் 352 ரன்களை துரத்திப் பிடித்ததுதான் இதுவரை சாதனையாக உள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் புதிய சாதனை படைக்கும்.