தீயில் அழியும் பழநி காடுகள்
ழநி வனப்பகுதிகளில் வறட்சியால் காய்ந்த செடி, கொடிகளை தீவைத்து எரிப்பதால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் தேக்கு, யூகலிப்டஸ் வகை மரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் காட்டெருமை, யானைகள், புலி உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன. போதிய மழை இல்லாததால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பட்டா நிலங்களில் காய்ந்த செடி, கொடிகள், மரங்களை வெட்டி சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். அதனால் ஏற்படும் தீப்பொறிகளால், வனப்பகுதியில் காட்டுத்தீ உருவாகிறது. இதனால் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம் பெயர்கின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, பழநி வனப்பகுதியை ஒட்டியுள்ள பள்ளங்கி, வில்பட்டி பகுதிகளில் உள்ள பட்டா நிலத்தில் சிலர் காய்ந்த செடி,கொடிகளை தீவைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வனத்தில் உள்ள பட்டா நிலங்களில் தீவைத்தால், தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். நேற்று முன்தினம் கொடைக்கானல் வனப்பகுதி பட்டா நிலத்தில் தீ எரிந்தது. அது வனப்பகுதியில் பரவவில்லை. பட்டா நிலத்தில் எரிக்கும்போது, வனப்பகுதிக்கு சேதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.