ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை தொடக்கம்: சிறையில் வண்ண உடைகளில் வலம் வரும் சசிகலா – அடுத்தடுத்து வீடியோ வெளியானதால் பரபரப்பு; சலுகைகள் பறிப்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை முறைகேடு தொடர் பாக ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு, சிறப்பு சலுகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு, நவீன வசதிகள் கொண்ட சமையலறை, படுக்கை அறை, உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜியாக சமீபத்தில் பொறுப்பேற்ற ரூபா டி. மவுட்கில் 2 அறிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட விசா ரணைக் குழுவை முதல்வர் சித்தரா மையா அமைத்தார். மேலும் டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூபாவுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல டிஜிபி சத்தியநாராயண ராவ், கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோருக்கு ஆதரவாகவும் ஒரு சில கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் சிறையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஷாப்பிங் போனாரா சசிகலா?
இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் 5 அறைகளின் புகைப் படங்கள் நேற்று முன்தினம் இரவு தனியார் தொலைக்காட்சி சேனல் களில் வெளியானது. தனித்தனி யாக இருந்த அந்த அறைகளில் சமைக்க பயன்படுத்தப்படும் குக்கர், சில பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள், துணிப் பைகள் உள்ளிட் டவை மிகவும் அலங்கோலமான நிலையில் இருந்தன.
இதையடுத்து, வெளியான வீடியோ காட்சியில், சிறையின் தாழ்வாரத்தில் சசிகலா வண்ண உடையில் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றன. சிறையில் சசிகலா சீருடை அணியாமல், வீட்டில் இருப்பது போல நைட்டி அணிந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற் கடுத்து வெளியான வீடியோவில், சாம்பல் நிற சுடிதார் அணிந்த சசிகலா மகளிர் காவலருடன் பேசிக்கொண்டு சிறையின் முக்கிய நுழைவாயிலுக்கு செல்கிறார். அப்போது அவரது கையில் ஷாப்பிங் மாலில் வழங்கப்படும் பை உள்ளது. அங்கு வர தயங்கும் சிகப்பு நிற சேலை அணிந்த இளவரசிக்கு தைரியம் கொடுத்து சசிகலா அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
இதேபோல அடுத்த வீடியோ வில், சுடிதார் அணிந்த சசிகலா, தோள் பையை போட்டுக்கொண்டு சிறை நுழைவாயிலில் நடந்து செல்கிறார். அவரை சக கைதி களும், போலீஸாரும் வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது கோப மடைந்த சசிகலா, அவர்களிடம் ஏதோ பேசியவாறு சிறை தாழ்வாரத் துக்குள் செல்கிறார். இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, சசிகலா அதிகாரிகளின் துணை யோடு ஷாப்பிங் போனாரா? அல்லது தன்னை சந்திக்க வந்தவர் களை பார்க்க வெளியே சென்றாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்நிலையில், அடுத்தடுத்து வீடியோ வெளியானதை தொடர்ந்து சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருந்த சில சலுகைகள் பறிக்கப்பட்டன.
உயர்மட்ட விசாரணைக் குழுவின் தலைவர் வினய் குமார் நேற்று முறைப்படி விசாரணையை தொடங்கினார். முதல்கட்டமாக கர்நாடக உள்துறை செயலர் சுபாஷ் சந்திராவை சந்தித்து ஆலோசித்த வினய் குமார், டிஐஜி ரூபா அளித்த 2 அறிக்கைகள், டிஜிபி சத்தியநாராயண ராவ் அளித்த 16 பக்க அறிக்கையை சேகரித்தார்.
இதையடுத்து கர்நாடக சிறைத்துறை டிஜிபி, டிஐஜி அலுவலகங்களில் ஆய்வு செய்த வினய் குமார், அங்கிருந்த முக்கிய ஆணங்களையும் வீடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தார். அங்கிருந்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அவர், அங்கு தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் அறையில் சோதனை நடத்தினார். மேலும் தற்போதைய கண்காணிப்பாளர் அனிதாவிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ஊடகங்களில் வெளியான சசிகலாவின் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றினார். இந்த வீடியோ காட்சிகளை எடுத்தது யார்? எப்போது எடுக்கப்பட்டது? என விசாரித்தார். அப்போது சசிகலா இருப்பது போன்ற வீடியோ, சிசிடிவி கேமராவில் இருந்து எடுக்கப்படவில்லை என்றும், செல்போனில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
முதல்கட்டமாக முக்கிய வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார், ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா டி. மவுட்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் திடீர் ஆய்வு நடத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் முத்திரை தாள் மோசடி வழக்கில் இதே சிறையில் அடைக் கப்பட்டுள்ள தெல்கியும் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வருவது உட்பட சிறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடு தொடர்பாக வும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தெல்கி சொகுசு அறையில் படுத்து தூங்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது போல, இதே சிறையில் அடைக்கப் பட்டுள்ள பிரபல ரவுடி சீனிவாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு துப்பாக்கி வடிவத்தில் 6 கிலோ எடைகொண்ட கேக் வெட்டுவது போன்ற வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.