ஆனது 155 நாள்; இருந்தது 13 நாள்: சசியின் சிறை ‛பிக்னிக்’
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 17ம் தேதி அடைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. அப்போது இருந்து, நேற்று வரை அதாவது, ஜூலை 19 வரையிலான, 155 நாட்களில் 13 நாட்கள் மட்டுமே அவர் சிறையில் இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சித்தராமையா அலட்சியம்:
சசிகலாவுக்கு தரப்பட்ட சலுகைகளால் எரிச்சல் அடைந்த சில சிறை அதிகாரிகள், கைதிகள் அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் தொடர்ச்சியாக இத்தகவல்களை கொண்டு சென்றனர். உள்துறை அமைச்சகத்தையும் கையில் வைத்திருக்கும் சித்தராமையா, தொடர்ந்து அலட்சியம் காட்டினார்.இந்நிலையில்தான், சித்தராமையாவின் சொந்தக் கட்சி எதிரியான பரமேஸ்வரை சிலர் தொடர்பு கொண்டு, பெங்களூரு சிறையில் நடக்கும் அக்கிரமங்கள், விதி மீறல்கள் குறித்து பட்டியல் போட்டு சொல்லி இருக்கின்றனர். இந்த சூழலில்தான், சிறைத் துறை டி.ஐ.ஜி.,யாக ரூபா நியமிக்கப்பட்டார்.பரமேஸ்வருக்கு, ரூபாவின் நேர்மையான நடவடிக்கைகள் நன்கு தெரியும். புகார் கொடுக்க வந்தவர்களை, ரூபாவை சந்திக்க அனுப்பி வைத்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்டவர்கள், ரூபாவை சந்தித்துப் பேசி, சிறை பற்றி சேகரித்து வைத்திருந்த தகவல்களை பட்டியல் போட்டிருக்கின்றனர். அதைக் கேட்டுக் கொண்ட ரூபா, ஆதாரங்களையும் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்.அதன்பின், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவிற்கு மூன்று முறைக்கும் மேலாக, திடீர் விசிட் செய்து, ரகசிய விசாரணை மேற்கொண்டு, ஆதாரங்களையும் கைப்பற்றினார். சிறையின் அனைத்து பகுதிகளையும் விடியோ பதிவெடுத்து வைத்துக் கொண்டார்.சிறைக்குள் பல கைதிகளிடமும் நடத்திய விசாரணையையும் பதிவெடுத்துக் கொண்டார், அடுத்த கட்டமாக, சிறையில் இருக்கும் சசிகலா சிறை விதிகளை மீறி, அளவுக்கு அதிகமான விசிட்டர்களை சந்தித்திருக்கிறார் என்ற தகவலுக்கான, சிறை ஆவணங்கள் சிலவற்றையும் பதிவெடுத்துக் கொண்டார்.
தகவல் அறியும் சட்டம்:
பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கடந்த, 117 நாட்களில், 82 பார்வையாளர்கள், 32 முறை சசிகலாவை பார்த்துள்ளனர் என்ற தகவலை கேட்டுப் பெற்றுள்ளார். அதற்கான, சிறை ஆவணங்களையும் பதிவெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ரூபா, இதையெல்லாம் வைத்துத்தான், சிறைத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த சத்தியநாராயண ராவுக்கு பரபரப்பான கடிதம் அனுப்பி, கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளார்.சிறைத்துறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை தான், சிறையில் இருக்கும் கைதிகளை, கர்நாடக அரசு பார்க்க அனுமதி அளிக்கும். ஆனால், சசிகலாவை, பார்வையாளர்கள் ஒரே வாரத்தில் பல முறை பார்த்துள்ளனர்.
இரவில் பார்வையாளர்கள்:
மேலும் காலை, 11 மணி முதல், 5 மணி வரை தான், கைதிகளை பார்க்க முடியும் என்ற நடைமுறையும் உள்ளது. ஆனால், சசிகலாவை இரவிலும் பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான வீடியோ பதிவையும் ரூபா கைப்பற்றி உள்ளார்.சட்டப்படி சசிகலா எட்டு விசிட்டர்களை மட்டுமே சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அவர் 82 விசிட்டர்களைச் சந்தித்திருப்பது அப்பட்டமான சட்டமீறல். அதாவது சட்டம் அனுமதித்த அளவை மீறி பத்து மடங்கு பார்வையாளர்களைச் சந்தித்திருக்கிறார் சசிகலா.
13 நாள் மட்டுமே சிறையில்:
சசிகலா சிறைக்குச் சென்ற கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் மொத்தம் அவர் 13 நாள்கள்தான் சிறையில் இருந்திருக்கிறார். மீதி நாட்களில் வெளியே ‛பிரிட்டானியா அபார்ட்மென்ட்’ என்ற கட்டடத்தில் உள்ள வீட்டில் அவர் தங்கியதாக கூறப்படுகிறது. அந்த 13 நாள்களுக்குள்ளேயே, அவர் ஏழு முறை பார்வையாளர்களைச் சந்தித்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களையெல்லாம் பெற்றிருக்கும் ரூபா, நடந்த சம்பங்களையெல்லாம் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷன் அதிகாரி வினய் குமார் வசம் விரைவில் ஒப்படைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கிடையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறைக்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கி இருக்கும் வினய் குமார், சிறையில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆதாரங்களை பெற்றிருப்பதால், கர்நாடக மாநில சிறைத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த சத்தியநாராயண ராவுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.வினய்குமாரின் முதல்கட்ட அறிக்கை, சிறை விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை உறுதிபடுத்துமானால், சசிகலாவை தும்கூர் அல்லது மைசூரு சிறைக்கு மாற்றும் முடிவுக்கும் கர்நாடக அரசு வந்திருப்பதாக தெரிகிறது.இதற்கிடையில், கர்நாடக டி.ஐ.ஜி., ரூபாவின் கருத்துக்கள், வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள விவரங்கள், சேகரிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் எல்லாவற்றையும் வைத்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், சிறைக்குள் பல்வேறு விதிமீறல்களை நடத்திய சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து மாற்ற வேண்டும்; நேர்மையான அதிகாரிகளை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். சிறைத் துறையில் இருக்கும் ஊழல் அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.