சச்சின் டெண்டுல்கரை ஆலோசகராக நியமிக்க விரும்பிய ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி, பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ குழுவிடம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணி புரியும் துணை பயிற்சியாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கண்ணா, தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி, செயலாளார் அமிதாப் சவுத்ரி, நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் அடங்கிய குழு ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக பாரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தின் போது இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால் பிசிசிஐ குழுவோ, தேசிய அணியுடன் பணிபுரிபவர்கள் இரட்டை பதவி ஆதாய விவகாரத்தில் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தியது. இதுதொடர்பாக பிசிசிஐ குழுவில் இடம் பெற்றிருந்த உறுப்பினர் ஒருவர் கூறும்போது,“ சச்சினை குறுகியகால ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை ரவிசாஸ்திரி முன்வைத்தார். ஆனால் இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக நாங்கள் அவருக்கு நினைவூட்டினோம். மேலும் குறுகியகால பதவிக்காக தொழில்முறை சம்பந்தமான கடமைகளில் இருந்து யாரையும் நாம் விலகச் சொல்வது என்பது சரியாக இருக்காது ”என்றார்.
இந்திய அணியின் ஆலோசகர் பதவியை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக் கொண்டால், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் அவர் அளித்து வரும் பங்களிப்பில் இருந்து விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சச்சின் தற்போது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலும் உள்ளார். இந்த குழுதான் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்தது.