கமல்ஹாசனை விமர்சிக்கும் அருகதை குதிரைபேர அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் காட்டம்
கமல்ஹாசனை விமர்சிக்கும் அருகதை குதிரைபேர அதிமுக அரசுக்கு இல்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (20-07-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையை அமைச்சர்கள் விமர்சனம் செய்வது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
”விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு குதிரை பேர அதிமுக ஆட்சி இருக்கிறது. இந்த ஊழல் அரசுக்கு கமல்ஹாசன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”சட்டப்படி உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு நபருக்கு இப்படி நினைவு மண்டபம் கட்டுவது என்பது முறைதானா என்பதை பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்றார்.