ஹர்மன்பிரீத் ‘சூறாவளி’ சதம்: பைனலில் இந்திய அணி
பெண்கள் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு ஜோராக முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங்கில் ‘சூறாவளியாக’ சுழன்ற ஹர்மன்பிரீத் கவுர், 115 பந்தில் 171 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்சில், பெண்களுக்கான 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது அரையிறுதியில் நேற்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் துவங்க சுமார் மூன்று மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் தலா 42 ஓவர்கள் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது.’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், பேட்டிங் தேர்வு செய்தார்.
மந்தமான மந்தனா:
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, பூணம் ராத் ஜோடிமோசமான துவக்கம் கொடுத்தது. மேகன் சட் வீசிய முதல் ஓவரில் மந்தனா (6), அவுட்டானார். பின் பூணம் ராத், கேப்டன் மிதாலி ராஜ் ஜோடி மந்தமான ஆட்டத்தை வௌிப்படுத்தியது. இந்நிலையில் பூணம் ராத் (14) அவுட்டானார்.
கவுர் சதம்:
அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர், ‘வேகம்’ காட்டிய போதும், 24.5 வது ஓவரில் தான், இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டியது. பந்துகளை வீணடித்த மிதாலி ராஜ், 36 ரன் (61 பந்து) எடுத்தார். பீம்ஸ் பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்த ஹர்மன்பிரீத் கவுர், 90 வது பந்தில், ஒருநாள் அரங்கில் 3வது சதம் எட்டினார்.
தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தார் இவர். கார்டுனர் வீசிய போட்டியின் 37வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர், 2 பவுண்டரி என, ஹர்மன்பிரீத் கவுர் விளாச, இந்திய அணி 36.3 வது ஓவரில் 200 ரன்களை கடந்தது.
நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீப்தி சர்மா (25) போல்டானார். கடைசி 10 ஓவரில் 129 ரன்கள் எடுக்க, இந்திய அணி 42 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. 115 பந்துகளில் 171 ரன்கள் (7 சிக்சர், 20 பவுண்டரி) எடுத்த ஹர்மன்பிரீத் கவுர், வேதா (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
இமாலய இலக்கு:
கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. மூனே (1), கேப்டன் மெக் லான்னிங் (0), போல்டன் (14) அடுத்தடுத்து வெ ளியேற 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின் வேகமாக ரன்கள் சேர்த்த வில்லானி, அரைசதம் எட்டினார். வில்லானி இந்திய அணிக்கு ‘வில்லி’ ஆகி விடுவாரோ என அஞ்சிய நிலையில், 75 ரன்னுக்கு (58 பந்து) அவுட்டானார். பெர்ரி (38) நிலைக்கவில்லை. பின் வந்த ஹீலே (5), கார்டுனர் (1), ஜோனாசன் (1), மேகன் (2) என, யாரும் நீடிக்கவில்லை.
பிளாக்வெல் மிரட்டல்:
பின், பீம்சுடன் இணைந்த பிளாக்வெல், கடைசி நேரத்தில் ரன் மழை பொழிந்தார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு ‘டென்ஷன்’ எகிறியது. கடைசியில் பிளாக்வெல் (90) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவரில், 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 36 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது.