நவாஸ் மகள், மகன்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள், மகன்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் முறைகேடாக சொத்துகள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘பனாமாகேட்’ என்றழைக்கப்படும் இந்த ஊழல் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தது.
கடந்த 10-ம் தேதி முதல் ‘பனாமாகேட்’ வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நவாஸின் மகள் மரியம், மகன்கள் ஹாசன், ஹுசேன் சார்பில் வழக்கறிஞர் சல்மான் ஆஜராகி வாதாடினார்.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது: லண்டனில் சொத்துகள் வாங்கியது தொடர்பாக பிரதமர் நவாஸின் மகள், மகன்கள் நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் 2006-ம் ஆண்டில் தயார் செய்யப்பட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘எழுத்துரு’ 2007-ம் ஆண்டுக்குப் பிறகே அறிமுகமானது. இது முரண்பாடாக உள்ளது.
நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டி ருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்ட விதிகளின்படி பிரதமரின் மகள், மகன்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.