பிரெசிடெண்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா இன்று மோதல்
இலங்கையில் பிரசிடெண்ட் லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று களம் இறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி2 0 ஆட்டத்தில் இந்திய அணி ஆடவுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இலங்கையின் பிரசிடெண்ட் லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா இன்று களம் இறங்குகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு முக்கியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு, ரோஹித் சர்மா, அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் பல டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை.
இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் ஆடாத அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் தொடரில் ஆடுகிறார். இந்நிலையில் அவர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட தயாராக உள்ளாரா என்பதை பரிசீலிக்க, இன்றைய போட்டி முக்கியமாக கருதப்படுகிறது.
ரோஹித் சர்மாவைப் போலவே ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு காயம் காரணமாக பல போட்டிகளில் ஆடாமல் இருந்த கே.எல்.ராகுலுக்கும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
2 நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்துக்கு பிறகு, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி கல்லேவில் தொடங்குகிறது.