சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகருக்கு மாற்றம்: இனி ‘மகாராஷ்டிரா ஓபன்’ என அழைக்கப்படும்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐஎம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 21 வருடங்களாக இந்த தொடர் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஜனவரில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டியை நடத்தும் ஐஎம்ஜி நிறுவனம் சமீபத்தில், தமிழக டென்னிஸ் சங்கத்துடனான ஒப்பந்தத்தை மேலும் 3 வருடத்துக்கு நீட்டித்து இருந்தது. ஒவ்வொரு வருடமும் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.2 கோடி நிதி வழங்கி வந்தது. இந்நிலையில் சென்னை ஓபன் போட்டியை புனேவுக்கு மாற்ற ஐஎம்ஜி நிறுவனம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் ஐஎம்ஜி நிறுவனம் இதை உறுதி செய்யாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை ஓபன் போட்டி இடம் மாறுவதை ஐஎம்ஜி நிறுவனமும், மகாராஷ்டிரா மாநில டென்னிஸ் சங்கமும் நேற்று உறுதி செய்தன. இதன் மூலம் சென்னை நகரில் நடத்தப்பட்டு வந்த சென்னை ஓபன் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.
புனே நகருக்கு இந்த தொடர் மாற்றப்பட்டுள்ளதால் இனிமேல் இந்த தொடர் ‘மகாராஷ்டிரா ஓபன்’ என அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஏடிபி சாலஞ்சர் போட்டிகள் வெற்றிகரமாக புனேவில் நடத்தி முடிக்கப்பட்டது. இங்குள்ள பாலேவாடி விளையாட்டு வளாகத்தில் ஏடிபி தொடரை நடத்தும் அளவுக்கு சிறந்த தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியும் இங்கு நடத்தப்பட்டது. இதையடுத்து ஏடிபி தரத்திலான போட்டியை நடத்த மகாராஷ்டிரா அரசு ஆர்வம் காட்டி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏடிபி தொடரை நடத்தும் 3-வது மையம் என்ற பெருமையை புனே நகரம் பெறுகிறது. இதற்கு முன்னர் டெல்லியில் இந்த போட்டி நடத்தப்பட்டது. 1996-ம் ஆண்டு முதல் இந்த வருடம் வரை சென்னையில் நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு முதல் புனேவில் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ் கூறும்போது, “மகாராஷ்டிரா ஓபன் போட்டியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரை நாங்கள் புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.
ஐஎம்ஜி நிறுவனத்தின் தொடர்பாளர் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக எண்ணற்ற ரசிகர்கள், தமிழக அரசு, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களால்தான் சென்னை ஓபன் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. வரும் தொடரில் புனே மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள டென்னிஸ் ரசிகர்களிடம் இருந்தும் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.
நாங்கள் ஒரு டென்னிஸ் பாரம்பரியத்தை உருவாக்கி உள்ளோம். சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்புகளை இளம் வீரர்களுக்கு நாங்கள் உருவாக்கி கொடுக்கிறோம். மேலும் இந்த தொடரில் விளையாடுவதன் மூலம் வீரர்கள் உலகத் தரவரிசைக்கான புள்ளிகளையும் பெற முடியும்” என்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அதற்கு முன்னதாக சென்னை ஓபன் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டி நடைபெறும் இரு நகரங்களிலும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலை நிலவுவதால் சென்னை ஓபன் போட்டியில் பங்கேற்க முன்னணி வீரர்கள் ஆர்வம் செலுத்தி வந்தனர்.
ரபேல் நடால், மரின் சிலிச், வாவ்ரிங்கா போன்ற முன்னணி வீரர்கள் கடந்த காலங்களில் சென்னை ஓபனில் பங்கேற்றுள்ளனர். ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்டு வந்த சென்னை ஓபன், இவர்களின் டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களையும் நிகழ்த்தி உள்ளன.
குறிப்பாக சென்னை ஓபனில் கோப்பையை கைப்பற்றுபவர்கள் எப்படியும் அந்த ஆண்டில் ஒரு கிராண்ட் ஸ்லாம் வெல்வது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.