5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
சட்டசபை தேர்தல்
பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோல் உத்தரகாண்ட் மாநில சட்டசபை பதவிகாலம் மார்ச் 26-ந் தேதியுடன் காலாவதி ஆகிறது.
மே மாதம் 27-ந் தேதியுடன் உத்தரபிரதேச சட்டசபையின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது.
இதனால் இந்த மாநிலங்களில் புதிய அரசுகள் பதவி ஏற்கும் விதமாக சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
தேதி அறிவிப்பு
இது தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, துணை தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
அதன்படி 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
60 தொகுதிகள் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேசம்
முதல் கட்ட தேர்தல்:
பிப்ரவரி 11-ந் தேதி – 73 தொகுதிகள்
பிப்ரவரி 15-ந் தேதி – 67 தொகுதிகள்
3-ம் கட்ட தேர்தல்:
பிப்ரவரி 19-ந் தேதி – 69 தொகுதிகள்
4-ம் கட்ட தேர்தல்:
பிப்ரவரி 23-ந் தேதி – 53 தொகுதிகள்
5-ம் கட்ட தேர்தல்:
பிப்ரவரி 27-ந் தேதி – 52 தொகுதிகள்
6-ம் கட்ட தேர்தல்:
மார்ச் 4-ந் தேதி – 49 தொகுதிகள்
7-ம் கட்ட தேர்தல்:
மார்ச் 8-ந் தேதி – 40 தொகுதிகள்.
மணிப்பூர் மாநிலம்
முதல் கட்ட தேர்தல்:
மார்ச் -4-ந் தேதி – 38 தொகுதிகள்
2-ம் கட்ட தேர்தல்
மார்ச்- 8-ந் தேதி – 22 தொகுதிகள்.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதில் 117 தொகுதிகள் உள்ள பஞ்சாபிலும், 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவிலும் பிப்ரவரி 4-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 15-ந் தேதி நடக்கிறது.
ஆளும் கட்சிகள்
தற்போது உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி ஆளும் கட்சியாக உள்ளது. முதல்-மந்திரியாக அகிலேஷ் யாதவ் பதவி வகித்து வருகிறார்.
உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. ஹரிஷ் ராவத் முதல்-மந்திரியாக இருக்கிறார்.
பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு பிரகாஷ் சிங் பாதல் முதல்-மந்திரியாக உள்ளார்.
பா.ஜனதா ஆளும் கட்சியாக உள்ள கோவாவில் முதல்-மந்திரியாக லட்சுமிகாந்த் பர்சேகர் இருக்கிறார்.
மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஒக்ராம் இபோபி சிங் முதல்-மந்திரியாக உள்ளார்.
ஓட்டு எண்ணிக்கை
5 மாநில சட்டசபைகளுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டாலும் ஓட்டு எண்ணிக்கை ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்படி ஓட்டு எண்ணிக்கை மார்ச் மாதம் 11-ந் தேதி நடைபெறும்.
தேர்தல் தேதிகளை அறிவித்த பின்பு தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நிருபர்களிடம் கூறியதாவது:-
வேட்பாளர் புகைப்படம்
இந்த 5மாநிலங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இது கடந்த 2012-ம் ஆண்டு இந்த மாநிலங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை விட சுமார் 15 சதவீதம் அதிகம் ஆகும்.
வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களில் வேட்பாளரின் சின்னத்துடன் வேட்பாளரின் சின்னத்துக்கு அருகில் அவருடைய புகைப்படமும் இடம் பெறும். முதல் முறையாக இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதேபோல் முதல் முறையாக ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், அரசு திட்டங்களுக்காக வெளிநாட்டில் பணியில் உள்ளவர்கள் இணையதளம் மூலம் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுகிறது. புதுச்சேரியில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மற்ற மாநில சட்டசபை தேர்தல்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நடத்தை விதிகள்
5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதை அனைத்து கட்சிகளும், தேர்தல் நடைபெற இருக்கும் மாநில அரசுகளும் பின்பற்றவேண்டும்.
வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான அனைத்து செலவுகளுக்காகவும் உடனடியாக தங்களுடைய பெயரில் புதிய வங்கி கணக்கை தொடங்கவேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை தங்களது காசோலை வாயிலாகத்தான் செலவிடவேண்டும். அதே நேரம், அனைத்து நன்கொடைகளையும் காசோலை வழியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களிலும் வேட்பாளர்கள் தேர்தலுக்காக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவுத்தொகை ரூ.20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு தேர்தல் நடைபெறுவதால் தேர்தலில் கருப்பு பண புழக்கம் குறைந்துவிடும் என்று நம்புகிறோம். ஆனால் வேறு பலவழிகளில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான தூண்டுதல்கள் அதிகரிக்கலாம். கருப்பு பணத்தை கண்காணிக்க 400 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
சாதி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அனைத்து கட்சிகளும் மதித்து நடக்க வேண்டும். இதை மீறினால் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கும்.
கட்டண நிலுவை கூடாது
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தன்னிடம் மின்சாரம், குடிநீர், டெலிபோன் கட்டணம் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு வாடகை கட்டணம் எதுவும் நிலுவையில் இல்லை என்பதை தங்களுடைய பிரமாண பத்திரத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இதேபோல், தனக்கு இந்திய குடியுரிமை தவிர வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை என்பதையும் வேட்பாளர்கள் தங்களது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி