சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம்: லட்சக்கணக்கில் விலை போகும் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள்
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளும், தாதாக்களும் 10 லட்சரூபாய்க்கு தனியார் தொலைக்காட்சி சேனல்களிடம் விற்றது தெரியவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 5 மாதங்களாக சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறி, சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி சிறைத் துறை டிஐஜி ரூபாடி. மவுட்கில் மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், “சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற் காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
இந்த கடிதம் அன்றைய தினம் இரவு ஒரு கன்னட தனியார் சேனலில் வெளியானது. புகாரை டிஜிபி சத்தியநாராயண ராவ் மறுத்தார். இதைத் தொடர்ந்து “ஊடகங் களுக்கு தகவல் அளித்தது ஏன்?” என விளக்கம் கேட்டு ரூபாவுக்கு முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத் திய நிலையில் ரூபா, 2-வது அறிக்கையை மாநில உள்துறைக்கு அனுப்பினார். இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தை அடைவதற்கு முன்பாகவே மற்றொரு தனியார் சேனலில் வெளியானது.
தனியார் சேனல்களின் வர்த்தகப் பிரிவு ஊழியர்கள் பெங்களூரு சிறைத் துறை அதிகாரிகள் அலுவலகம், ரூபாவின் வீடு, பத்திரிகையாளர் சங்கம், பரப்பன அக்ரஹாரா சிறை ஆகிய இடங்களில் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கினர். அப்போது அந்த ஊழியர்கள் சிறைத்துறை அதிகாரி களிடமும் மூத்த க்ரைம் ரிப்போர்ட்டர் களிடமும் சசிகலா வீடியோ கேட்டு அலைந்தனர்.
இதே போல டிஐஜி ரூபாவை தொடர்பு கொண்டு தங்களது சேனலுக்குதான் வீடியோ ஆதாரத்தை முதலில் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தனியார் சேனல்களின் தொல்லை தாங்க முடியாமல் செல்போனை அவர் அணைத்து வைத்தார். கடந்த 17-ம் தேதி சசிகலாவின் சிறை அறை களின் 5 புகைப்படங்களை, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தேசிய தொலைக் காட்சி வெளியிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த புகைப்படங்களை டிஐஜி ரூபா தான் கசியவிட்டார் என முதல்வர் சித்தரா மையாவுக்கு உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால், கோபமடைந்த சித்தராமையா அதிரடியாக டிஜிபி சத்தியநாராயண ராவ், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா ராய் ஆகியோரை இடமாற்றம் செய்தார்.
முன்பணம் ரூ.50 ஆயிரம்
இதனால் மீண்டும் சேனல்களின் வர்த்தகப்பிரிவு ஊழியர்கள், செய்தியா ளர்கள் சசிகலாவின் வீடியோ ஆதாரங் களை கைப்பற்ற வியூகங்களை வகுத் தனர். சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம் ஒரே நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும், தமிழகத்தில் அதிமுக அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத் துவதால் ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் களும் இதில் அக்கறை காட்டினர். வீடியோ ஆதாரங்களுக்கு தாங்கள் ஸ்பான்சர் தருவதாகவும் தனியார் சேனல்களுக்கு உத்தரவாதம் அளித்தனர்.
இதையடுத்து சேனல்களின் ஊழி யர்கள் பெங்களூரு பத்திரிகையாளர் சங்கம், பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் மையமிட்டு வீடியோ ஆதாரங் களை வைத்திருக்கும் நபர்களை மோப்பம் பிடித்தனர். அப்போது சிறையில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரியின் நண்பர் மூலம் ஒரு வீடியோ காண்பிக் கப்பட்டது. தெளிவாக இல்லாத அந்த வீடியோவில், சிறையில் சசிகலா சீருடை அணியாமல் நைட்டி அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 2 நிமிடங்களுக்கு குறைவான வீடியோவை முதல்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கி, ஒரு கன்னட தனியார் சேனல் ஒளிபரப்பியது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறையில் இருக்கும் முக்கிய தாதாவின் அடியாட்கள் மூலமாக எடுக்கப்பட்ட சசிகலாவின் இன்னொரு வீடியோ இருப்பதாக ஊடக வட்டாரத்தில் பரவியது. இதையடுத்து அந்த தாதாவை ஊடகங்கள் அணுகிய போது, அட்வான்ஸாக ரூ.50 ஆயிரம் தந்தால் வீடியோவை காண்பிப்பதாக தெரிவித்தார். இதனை கன்னட சேனல்கள் ஏற்க மறுத்ததால், ஒரு தேசிய தனியார் சேனல் ரூ.5 லட்சம் கொடுத்து அந்த வீடியோவை வாங்கியது. அதில் சசிகலா நைட்டி அணிந்தவாறு, வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட சாப்பாட்டு கேரியரை உள்ளே கொண்டு செல்கிறார். 1.15 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ விலை ரூ.10 லட்சம்
கடந்த செவ்வாய்க்கிழமை சிறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் சசிகலா தொடர்பான முக்கிய வீடியோ இருப்பதாக தகவல் வெளியானது. 5 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் சசிகலா சீருடை அணியாமல் இளவரசியுடன் சல்வார் கமீஸ் உடையில் தோன்று கிறார். ஷாப்பிங் செல்லும் பையை யும் கையில் வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவை கைப்பற்ற தனியார் சேனல்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதால் ஒரு தனியார் தேசிய சேனல் எடுத்த எடுப்பில் ரூ. 10 லட்சம் கொடுத்து அதனை வாங்கியது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை உறுதி செய்தது. இதனால் கர்நாடக அரசுக்கும், சசிகலாவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் சிறையில் சசிகலா வுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன.
வெளியாகாத வீடியோக்கள்
சசிகலா சிறையில் சொகுசாக இருக்கும் வேறு சில வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என கடந்த இரு தினங்க ளாக பெங்களூரு ஊடக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர் பாக விசாரித்தபோது சிறை அதிகாரி ஒருவரிடம் இருந்து 2 வீடியோக்களை கன்னட தனியார் சேனல் செய்தியாளர் ஒருவர் கைப்பற்றி உள்ளார். அந்த வீடியோவில் சசிகலா செல்போனில் பேசுவது போலவும், மற்றொரு வீடியோ வில் இளவரசியுடன் பேசிக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகளும் இருக் கின்றன. இந்த இரு காட்சிகளிலும் போலீஸ் அதிகாரிகளின் படங்களும், கர்நாடக அரசுக்கு நெருக்கமான ஒருவர் குறித்த முக்கிய உரையாடலும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இரு வீடியோக்களை வைத்துள்ள அந்த செய்தியாளர் ஒரு வழக்கறிஞர் மூலமாக கர்நாடகாவில் ஆளும் கட்சி நிர்வாகியிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள் ளார். இந்த வீடியோ வெளியானால் கர்நாடக அரசுக்கும், அந்த நிர்வாகியின் அரசியல் எதிர்காலத்துக்கும் பெரும் அவப்பெயர் ஏற்படும். எனவே கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் வீடியோவை வெளியிடாமல் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த கர்நாடக எதிர்க்கட்சிகள் தேர்தல் நெருங்கும் நிலையில் வீடியோவை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். அந்த வீடியோ தேசிய ஊடகங்களில் வெளியானால் சசிகலாவின் லஞ்ச விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்படும். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
இதனிடையே சசிகலா குடும்பத் தாருக்கு நெருக்கமான சிலரும் அந்த வீடியோக்களை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் தன் நண்பர் மூலமாக ரூ 2 கோடி வரை பேரம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை பேரம் படியாமல் போனால் சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான புதிய வீடியோவும், வேறு சில புகைப்பட ஆதாரங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு ஊடக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சசிகலாவின் வீடியோ ஆதாரங் களுக்கு பெங்களூருவில் நல்ல விலை கிடைப்பதால் வெளியில் இருக்கும் தாதாக்கள் உள்ளே இருக்கும் தங்களது அடியாட்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றனர். அதாவது சசிகலாவின் வீடியோ, புகைப்பட, உரை யாடல் ஆதாரங்களை எடுத்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதன் மூலம் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தமிழ கத்திலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த லாம். எனவே விரைவில் சசிகலாவின் ஆதாரங்களை அனுப்பும்படி தெரிவித் துள்ளனர்.
இதே போல சிறையில் உள்ள உயர் அதிகாரிகள், போலீஸார், ரவுடிகள் என பலரும் சசிகலாவின் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை திரட்டும் வேலை யில் இறங்கியுள்ளனர். இந்த வீடியோக்கள் வெளியானால் ஒரு பக்கம் சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தண்டனைக்குரிய குற்றச்சாட்டில் சிக் கலாம். இன்னொரு பக்கம் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வாய்ப்பு உண்டு என்கின் றனர் அரசியல் நோக்கர்கள்.
சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான்..
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என சிறைத்துறை அதிகாரிகள் கர்நாடக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு கூட்டம் அதன் தலைவர் ஆர். அசோக் தலைமையில் நேற்று நடந்தது. இந்த குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்பேரில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக், டிஐஜி ரேவண்ணா, சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அப்போது கர்நாடக சிறைத் துறை சார்பாக பதில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடு தொடர்பாக நடத்திய ஆய்வில் சில முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் காட்டப்பட்டு, அவர் சீருடை அணியாமல் இருந்தது உண்மைதான். சிறையில் சசிகலா பார்வையாளர்களை சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா எண் 7 மற்றும் 8 செயல்படாமல் இருந்தது. சிறையில் சில சிசிடிவி கேமரா செயல்படாமல் இருந்தது. சசிகலாவின் அறையில் இருந்து சமையல் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ன. இதன் மூலம் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என தெரியவந்துள்ளது”என குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக சிறைத்துறையின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இதனால் சிறை முறைகேடு விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.