ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்க பிஎப் நிறுவனம் ஏற்பாடு
பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்றே ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறுகின்றனர். இவ்வாறு ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு பல வாரங்கள் ஆன பிறகே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்க பிஎப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள் ளது. இதன்படி, ஓய்வு பெறும் சம்மந்தப்பட்ட தொழிலாளி, ஓய்வு பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், முதலாளிகளும் தங்கள் பங்குக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதுதொடர்பாக அருகில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை, புதுச்சேரிக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கூடுதல் ஆணையர் பி.டி.சின்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.