இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நிமோனியா காய்ச்சலால் சந்திமால் விலகல்
இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திமாலுக்கு பதிலாக இலங்கை அணியின் கேப்டனாக ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 26-ம் தேதி காலேவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிருபர்களிடம் கூறிய இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜெயசூர்யா, “இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது. சந்திமாலின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2-வது டெஸ்ட் போட்டிக்குள் அவர் பூரணமாக குணமடைந்தால் அணியில் மீண்டும் சேர்க்கப்படுவார். முதல் டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடாததால், அவருக்கு பதிலாக ரங்கனா ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரில்தான் இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக சந்திமால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மாற்று கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரங்கனா ஹெராத், அந்த அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ஆவார். டெஸ்ட் போட்டிகளில் 384 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட்டில் 11 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், ஐசிசி தரவரிசையில் ஹெராத் 2-வது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது