பயிற்சி ஆட்டத்தில் குல்தீப் யாதவ் அசத்தல்
இலங்கை பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. முன்னதாக முதலில் பேட் செய்த பிரசிடென்ட் அணியை 187 ரன்களுக்குள் இந்திய பந்து வீச்சார்கள் சுருட்டினர்.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொழும்புவில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி, இலங்கை பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் நேற்று களம் இறங்கியது.
குல்தீப் யாதவ்
முதலில் பேட்டிங் செய்த பிரசிடென்ட் லெவன் அணி 55.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குணதிலகே 74, லகிரு திரிமானே 59 ரன்களை எடுத்தனர். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான குஷால் சில்வா 4, டிசில்வா 0, பிரியஞ்சன் 2, வீரக்கொடி 10 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 14 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கே.எல்.ராகுல் 54, அபினவ் முகுந்த் 0, புஜாரா 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். கோலி 34 ரன்களுடனும், ரஹானே 30 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.