போலி மருந்து விளம்பரம் ‘டிவி’ சேனல்களுக்கு எச்சரிக்கை
ருந்துகளின் குணப்படுத்தும் தன்மையை, மிகைப்படுத்தி காட்டும் விளம்பரங்கள் குறித்து, ‘டிவி’ சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருந்துகளின் குணப்படுத்தும் தன்மையை மிகைப்படுத்தி, ‘டிவி’ சேனல்களில் அதிகளவில் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய விளம்பரங்கள், மக்களை ஏமாற்றும் வகையில், உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களுடன் தயாரிக்கப்படுகின்றன.
இந்த விவகாரத்தை, மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை கவனத்திற்கு, ‘ஆயுஷ்’ அமைச்சகம் எடுத்துச் சென்றது. இதையடுத்து, ‘டிவி’ சேனல்களுக்கு, மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை கடித விபரம்:
முறையான லைசென்ஸ்கள் பெற்றுள்ள மருந்துப் பொருட்கள் குறித்த விளம்பரங்களை மட்டுமே, ‘டிவி’ சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும். தவறான தகவல்களுடன் தயாரிக்கப்படும், விளம்பரங்களால், மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
இத்தகைய விளம்பரங்களை நம்பி, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி வாங்கி பயன்படுத்தப்படும் மருந்துகளால், மக்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.விளம்பரங்களில், தங்களை மருத்துவர்களாக, குருவாக, வைத்தியர்களாக அறிவித்துக் கொள்ளும் நபர்கள், மக்களுக்கு மருந்து தொடர்பான தவறான பரிந்துரைகளை அளிக்கின்றனர்.
எல்லா நோய்களுக்கும், தாங்கள் பரிந்துரைக்கும் மருந்தால், அதிசயிக்கத் தக்க வகையிலான தீர்வு கிடைக்கும் என, அவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.