புகுஷிமாவில் அணு கழிவு : படம் பிடித்த ‘ரோபோ’
ஜப்பானில், சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணு உலையில், அணுக் கழிவுகள், குவிந்து இருப்பதை, இயந்திர மனிதன் என அழைக்கப்படும், ‘ரோபோ’ கண்டறிந்துள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், 2011ல் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து, பசிபிக் பெருங்கடலில் சுனாமி தாக்கியது. அங்குள்ள புகுஷிமா அணு உலைக்குள், சுனாமி பேரலை புகுந்தது; இதனால், குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்து, மூன்று அணு உலைகள் பாதிக்கப்பட்டன.
கதிர்வீச்சு ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து, புகுஷிமா அணு உலையை சீரமைக்கும் பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு
உள்ளது. அணுக்கதிர் வீச்சு அதிகமாக இருப்பதால் மனிதர்கள் நேரடியாக சென்று, பணிகளை செய்ய முடியாது; எனவே, அங்கு, ‘ரோபோ’ மூலம் சீரமைப்பு பணிகளை செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.புகுஷிமாவில் செயலிழந்த மூன்று அணு உலைகளில், மூன்றாவது உலையில், 3 அடி உயரத்திற்கும் அதிகமாக, அணு எரிபொருள் கழிவு, பாறைபோல் தேங்கியுள்ளது; இதை கேமரா மூலம் படம் பிடித்துள்ள ரோபோ, அந்த காட்சிகளை அனுப்பி வைத்துள்ளது.
அதை சுத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது; ஆனால், அணு கழிவுகள் அதிகமாக உள்ளதால் அவற்றை சுத்தம் செய்யும் பணியை உடனடியாக மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. முதல் இரண்டு அணு உலைகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு, அணு கதிர்வீச்சு அதிகமாக உள்ளது. எனவே, அங்கு ரோபோ மூலம் கண்காணிப்பை கூட செய்ய முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது.