ஆந்திர தக்காளி வரத்து இல்லை: எகிறியது விலை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில், ஆந்திர தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை ஏற்றம் அடைந்துள்ளது. சாணார்பட்டி சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் கொடித்தக்காளி சாகுபடி செய்துள்ளனர். போதிய மழை இல்லாததால் ஆயிரம் அடிக்கும் கீழ் போர்வெல் அமைத்து கிடைக்கும் சிறிதளவு தண்ணீரைக் கொண்டு தக்காளி
பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் விளையும் தக்காளி கோபால்பட்டி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. சாகுபடி பரப்பு குறைவாக இருந்த போதும் செலவு அதிகமாகிறது. இரு மாதங்களுக்கு முன், ஆந்திர தக்காளி வரத்து அதிகம் இருந்ததால், ஒரு கிலோ தக்காளி ரூ.30 க்கு விற்றது.
ஆந்திராவில் சீசன் முடிந்ததால் வரத்து குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளில் ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால், விளைச்சல் குறைந்துவிட்டது. விலை இருந்தும் வருமானம் ஈட்ட முடியாததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.