மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி
குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மொத்தம் உள்ள மூன்று இடங்களுக்கு நான்கு வேட்பாளர்களுக்கு போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் நோட்டா(யாருக்கும் வாக்கு இல்லை) இடம் பெறும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவை இன்று கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா பேசுகையில்,” அரசியலமைப்பு அல்லது தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்ட மக்கள் பிரநிதித்துவ சட்டத்திலோ எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமலே நோட்டா இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளாமல் இதை எவ்வாறு செய்ய முடியும். அவை மூலம் காலியிடங்கள் அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் எவ்வாறு புதிய ஷரத்துக்கள் அறிமுகப்படுத்த முடியும்” என்றார்.
உறுப்பினர்களை சமாதானம் செய்த மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி, இந்த விவகாரம் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறி கேள்வி நேரத்தை நடத்த முயற்சித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவாறே இருந்தனர். இதையடுத்து, குறுக்கிட்டு பேசிய அருண் ஜெட்லி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றியே நோட்டா இடம் பெற்று இருப்பதாக விளக்கம் அளித்தார்.
மேலும், நோட்டா இடம் பெற்றதில் ஏதேனும் மனக்குறை இருந்தால் அவர்களுக்கு சொந்த விருப்பங்கள் உள்ளன. மாநிலங்களவையின் கேள்வி நேரம் இதற்கு எவ்வாறு பொறுப்பாகும். தேர்தல் ஆணையத்தின் முடிவை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய முடியும்” என்றார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா இடம் பெற வேண்டும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பிறகு, மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டா இடம் பெறும் முறை அமலுக்கு வந்ததாக தேர்தல் கமிஷனில் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாநிலங்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு செய்த பின் உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சீட்டில் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டிடம் கண்பித்த பிறகே வாக்குப்பெட்டிக்குள் சீட்டை போட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.