டெல்லியில் அடிமைச்சங்கிலி அணிந்து விவசாயிகள் போராட்டம்
விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம் நடத்திய அவர்கள் கடந்த மாதம் 16-ந் தேதி 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். 2-ம் கட்ட போராட்டம் நேற்று 17-வது நாளாக நீடித்தது. இதையொட்டி நேற்று 4 விவசாயிகள் தங்களது உடலில் அடிமைச்சங்கிலியை அணிந்து கொண்டனர். அவர்களுடன் சேர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட பிற விவசாயிகள் ஜந்தர் மந்தர் ரோட்டில் ஊர்வலமாக சென்றனர்.
காய்ச்சலால் அவதி
இதற்கிடையே, போராட்டம் நடத்திய விவசாயிகளில் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பும் சில விவசாயிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது.
இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், “டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20-க்கும் குறைவான மருந்து, மாத்திரைகளையே தருகிறார்கள். அதற்கும் கூடுதல் விலையுள்ள மருந்து, மாத்திரைகளை தனியார் ஆஸ்பத்திரியில் விலை கொடுத்து வாங்க சொல்கிறார்கள். இதுபற்றி கேட்டாலும் உரிய பதில் இல்லை. டெல்லியில் எங்களை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் அடிமைகளைப் போலவே நடத்துகிறார்கள். அதனாலேயே நாங்கள் அடிமைச்சங்கிலி அணிந்து போராட்டம் நடத்தினோம்” என கூறினார்.