சொந்த மண்ணில் 23 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 23 சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டி ஒன்றை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சர்வதேச கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாத இறுதிக்குள் 23 சர்வதேச போட்டிகளில் (மூன்று டெஸ்ட், 11 ஒரு நாள் போட்டி மற்றும் 9 இருபது ஓவர் போட்டி) சொந்த மண்ணில் விளையாட உள்ளது. போட்டிக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயண மற்றும் போட்டி அட்டவணை கமிட்டி நேற்று ஆலோசித்து முடிவு செய்தது.
இதன்படி செப்டம்பர் 2–வது வாரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் சென்னை, பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும், 20 ஓவர் போட்டிகள் ஐதராபாத், ராஞ்சி, கவுகாத்தி ஆகிய இடங்களிலும் நடத்தப்படுகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பாரஸ்பராவில் புதியதாக கட்டப்பட்ட ஸ்டேடியத்தில் இந்த 20 ஓவர் போட்டி அரங்கேறும். இதே போல் சென்னை சேப்பாக்கத்தில் 2 ஆண்டுக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் வருகை
அதைத் தொடர்ந்து அக்டோபர் 2–வது அல்லது 3–வது வாரத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தந்து மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் (புனே, மும்பை, கான்பூர்), மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் (டெல்லி, கட்டாக், ராஜ்கோட்) பங்கேற்கிறது.
இதன் பிறகு இலங்கை அணி நவம்பர் – டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வந்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா–இலங்கை இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொல்கத்தா, நாக்பூர், டெல்லி ஆகிய மைதானங்களில் இடம்பெறும். இதில் மோசமான ஆடுகளம் புகார் எதிரொலியாக ஓராண்டு இடைநீக்க நடவடிக்கைக்குள்ளான நாக்பூருக்கு மீண்டும் சர்வதேச போட்டி வாய்ப்பு கிட்டியுள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே தர்மசாலா, மொகாலி, விசாகப்பட்டினத்திலும், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொச்சி அல்லது புதிதாக அங்கீகாரம் பெற்ற திருவனந்தபுரம், இந்தூர், மும்பை ஆகிய இடங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பண்டிகை உள்ளிட்ட சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக போட்டிக்குரிய தேதி விவரம் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு தொடர்கள் நிறைவடைந்ததும் இந்திய அணி உடனடியாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாட இருக்கிறது. தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
பழைய முறையில் ரஞ்சி
இதற்கிடையே சவுரவ் கங்குலி தலைமையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்ப கமிட்டி கூட்டத்தில், பொதுவான இடத்தில் ரஞ்சி போட்டியை நடத்துவதற்கு வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதாலும், ரசிகர்களின் ஆதரவு இல்லாததாலும் மீண்டும் பழைய முறைப்படி உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் லீக் ஆட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாக்–அவுட் ஆட்டங்கள் வழக்கம் போல் பொதுவான மைதானங்களில் தொடரும். 2017–18–ம் ஆண்டுக்கான ரஞ்சி சீசன் அக்டோபர் 6–ந்தேதி தொடங்குகிறது.